மேற்கு வங்கத்தில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தற்போது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
தகவல்களின் படி, சந்திரநாத் ரத் கடந்த சில ஆண்டுகளாக சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளராகவும் நிர்வாக உதவியாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். சம்பவம் இரவு, கொல்கத்தா விமான நிலையம் அருகிலுள்ள டோல்டலா–மத்தியம்கிராம் சாலையில் அவர் சென்றுகொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரது வாகனத்தை வழிமறித்து மிக அருகில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணையில், தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கிகள் “க்ளாக் 47X” வகையைச் சேர்ந்த அதிநவீன ஆயுதங்கள் என சந்தேகிக்கப்படுகிறது. இது சாதாரண குற்றவாளிகள் பயன்படுத்தும் ஆயுதம் அல்ல என்பதால், இதில் தொழில்முறை கூலிப்படையினர் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பு மதிப்பீடு செய்கிறது.
சம்பவ இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தின் பதிவு எண் போலியானது என உறுதியாகியுள்ளது. மேலும் அந்த வாகனம் சேதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததாகவும், குற்றவாளிகள் அடையாளம் தெரியாமல் தப்பிக்க திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள், சம்பவ இடத்தில் இருந்து தோட்டாக்கள் மற்றும் வெடித்த குண்டு உறைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தடயவியல் குழுவும், சிசிடிவி காட்சிகளும் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன. சம்பவத்தின் போது, குறைந்தது நான்கு பேர் கொண்ட மோட்டார் சைக்கிள் குழு மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் இணைந்து தாக்குதலை ஒருங்கிணைத்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். வாகனம் திடீரென வழிமறிக்கப்பட்டதும், அருகில் இருந்து தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் சந்திரநாத் ரத் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அவரது ஓட்டுநரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை” என சுவேந்து அதிகாரி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். சம்பவம் நடந்த பகுதிகள் பல நாட்களாக நோட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தொண்டர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மறுபுறம், ஆளும் தரப்பு இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குள் நடந்த இந்த கொலை, மாநில அரசியலில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
Read more: Flash : நகைப்பிரியர்களுக்கு ஷாக்..! இன்றும் தங்கம் விலை உயர்வு..! எவ்வளவு தெரியுமா..?



