தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்னோட்டம் நடைபெறவுள்ளது.
நாட்டில் 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில் கணக்கெடுப்புக்கான முன்னோட்டம் நடைபெறவுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 3 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம், ஆர் கே பெட் தாலுகாவின் ஒரு பகுதி, காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி ஆகிய இடங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்னோட்டம் நடைபெறவுள்ளது.
இப்பணிகள் சுமூகமாக நடைபெறுவதற்கு தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் தொழில்முறை வழிகாட்டுதல், பயிற்சி மற்றும் மேற்பார்வை உள்ளிட்டவற்றை மாநில அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும். மாநில அரசின் கல்வி, வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறை அலுவலர்கள் களப்பணிக்காக கணக்கெடுப்பாளர்களாகவும், மேற்பார்வையாளர்களாகயும் செயல்படுவார்கள். இதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில் உள்ள மக்கள் இந்த முன்னோட்டம் கணக்கெடுப்பின் போது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். களப்பணியாளர்களுடன் துல்லியமான விவரங்களை பகிர்ந்து கொள்வது கணக்கெடுப்பின் போது பயன்படுத்தப்படும் டிஜிட்டல் செயலிகள் மற்றும் செயல்முறைகளை செம்மைப்படுத்த உதவும். இந்த முன்னோட்டம் 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வெற்றிகரமாக அமைய வழிவகுக்கும். நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மிகத்துல்லியமிக்க செயல்திறனுடைய தயார்நிலையை உறுதிசெய்ய இந்த முன்னோட்டம் பயிற்சி உதவும்.
2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன்னோட்டம் 10-11-2025 முதல் 30-11-2025 வரை நடைபெறும். அத்துடன் சுய கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கான முன்னோட்டம் 1-11-2025 முதல் 7-11-2025 வரை நடைபெறும் என்று தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.



