சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்இன்று தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.. அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் பிரதமர் மோடி இன்று ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “திரு ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும் தனது அன்பான வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.. தனது எக்ஸ் பதிவில் “ ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!
மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!
ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பார் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்..
சூப்பர் ஸ்டார். தலைவர் என்று தனது ரசிகர் பட்டாளத்தால் அன்பாக அழைக்கப்படும் ரஜினிகாந்த், இந்திய சினிமாவில் மிகவும் மதிக்கப்படும் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக வலம் வருகிறது.. தனது 50 ஆண்டுகால திரை வாழ்க்கையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
கோவாவில் நடைபெற்ற 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நிறைவு விழாவில், ரஜினிகாந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். திரைப்படத் துறையில் அவரது புகழ்பெற்ற வாழ்க்கையின் 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.



