பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் இதுவரை 23.09 லட்சம் பயனாளிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; 18 வகையான பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு உதவிடும் வகையில், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17.09.2023 அன்று தொடங்கப்பட்டது. 01.12.2025 நிலவரப்படி 30 லட்சம் பயனாளிகள் இதில் பதிவு செய்து அவர்களில் 23.09 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி, பேடிஎம், பேநியர்பை, பாரத்பே, போன்பே ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் பயனாளிகள் மின்னணு பரிவர்த்தனை முறையில் ஊக்கத்தொகைகளை பெறுவதற்காக க்யூஆர் கோடை உருவாக்க இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுவரை 6.8 லட்சத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு 22 கோடி ரூபாய் அளவிற்கு மின்னணு பணப்பரிவர்த்தனை ஊக்கத்தொகைகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஓஎன்டிசி, ஃபேப் இந்தியா, மீஷோ போன்ற மின்னணு வர்த்தக தளங்கள் மூலம் பிரதமரின் விஸ்கர்மா பயனாளிகளுக்கு ஆன்லைன் சந்தை வாய்ப்பு ஆதரவும் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ‘பிரதமர் விஸ்கர்மா சான்றிதழ்’ மற்றும் அடையாள அட்டையுடன் முதல் தவணையாக ஒரு லட்ச ரூபாய் வரை வட்டியில்லாக் கடனும், இரண்டாம் தவணையாக 2 லட்சம் ரூபாய் கடனும் வழங்கப்படுகிறது.
மேலும் வங்கிக்குச் செலுத்த வேண்டிய வட்டியான 13 சதவீதத்தில் 8 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. மீதம் 5 சதவீத வட்டியை மட்டும் கடன் பெறுவோர் செலுத்தினால் போதும்.அடிப்படைப் பயிற்சி, மேம்பட்ட பயிற்சி என இரு விதங்களில் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், பயிற்சி பெறுவோருக்கு தினமும் 500 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படுகிறது; கருவிகளை வாங்க 15,000 ரூபாய் நிதியுதவி தரப்படுகிறது.



