பயிர் பாதிப்பை கணக்கெடுத்து டிசம்பர் இறுதிக்குள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண் அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மழை காரணமாக தற்போதைய நிலவரப்படி 68,226 ஹெக்டேர் பரப்பில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வயல்களில் தேங்கியுள்ள நீரை உடனடியாக வடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மேலும், அலுவலர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பயிர் சேத நிலைகளுக்கு ஏற்ப உரிய பயிர் மேலாண்மை ஆலோசனைகள் வழங்க வேண்டும். உடனடியாக, வருவாய்த் துறையுடன் இணைந்து ஆய்வு மூலம் 33 சதவீதத்துக்கு மேல் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பைக் கணக்கீடு செய்து டிசம்பர் இறுதிக்குள் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற இயற்கை இடற்பாடுகள் நேரங்களில் விதைகள், உரங்கள், போதுமான அளவு இருப்பு வைக்கப்பட வேண்டும். மறுபயிர் செய்வதற்குத் தேவையான விதைகள் இருப்பு வைக்க வேண்டும். கடந்த அக்டோபரில் பெய்த மழையால் 33 சதவீதம், அதற்கு மேல் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு நிவாரணம் பெறுவதற்கான கருத்துருவை அரசுக்கு அனுப்ப வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.



