வருகின்ற டிசம்பர் மாதம் முதல், இன்னும் கூடுதலான மகளிருக்கும், யார், யாருக்கெல்லாம் விடுபட்டுள்ளதோ அவர்களுக்கும் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டையில் நேற்று நடந்த அரச நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி; வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்றைக்கு மட்டும் சுமார் 73 ஆயிரம் பேருக்கு, இந்த அரங்கத்தில் மட்டும் 22 ஆயிரம் பேருக்கு, சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உங்கள் முன்பு வழங்கி உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமையடைகின்றேன்.
73 ஆயிரம் பேருக்கு நலத்திட்டம் கொடுக்கின்றோம் என்றால்,அதில், 55 ஆயிரம் பேர் மகளிர், பெண்கள் என்று சொல்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல, பொதுவாகவே நம்முடைய அரசு அமைந்தபிறகு, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து அது மகளிருக்கான அரசாக, பெண்களுடைய முன்னேற்றத்திற்கான அரசாகவே தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மகளிர், பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறவேண்டும். யாரையும் எதிர்பார்த்து இல்லாமல், அவர்களுடைய சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார். நம்முடைய அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய திட்டங்களை எல்லாம் பார்த்தாலே உங்களுக்கு புரியும்.
ஒவ்வொரு மகளிரும் மாதா, மாதம் 900லிருந்து 1,000 ரூபாய் வரை சேமிக்கின்றார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், இந்த இராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 8 கோடி பயணங்களை மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் மூலம் மகளிர் மேற்கொண்டு இருக்கின்றார்கள். இதுதான் அந்த திட்டத்தினுடைய இந்த அரசினுடைய வெற்றி.அதே மாதிரி இன்றைக்கு அரசுப்பள்ளியில் படித்து பள்ளிக்கூடம் சென்றால் மட்டும் பத்தாது, உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவித்த திட்டம் தான் திட்டம் புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம். உயர்கல்வி சேரும் போது ஒவ்வொரு மாணவனுக்கும், மாணவிக்கும் மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
கிட்டத்தட்ட 1 கோடியே 20 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்து கொண்டு வருகிறார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், கடந்த 26 மாதங்களாக, 1 கோடியே 20 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முதலமைச்சர் அவர்கள் கொடுக்கின்றார்.இந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு மாதமும் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மூலம் பயன்பெற்று வருகிறார்கள். வருகின்ற டிசம்பர் மாதம் முதல், இன்னும் கூடுதலான மகளிருக்கும், யார், யாருக்கெல்லாம் விடுபட்டுள்ளதோ அவர்களுக்கும் முதலமைச்சர் அவர்கள் கொடுப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறார். அவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வர இருக்கின்றது என்றார்.



