பாரம்பரிய ஞானமும், நிலையான வழிமுறைகளும் இந்திய வேளாண்மையின் ஆற்றல் சக்தியாக இருந்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அதே வேளையில் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்க வேண்டியதன் தேவையை உணர்ந்து, நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் பாரம்பரிய விவசாய வளர்ச்சித் திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது.கடந்த 10 ஆண்டுகளில் இந்த திட்டம் இந்தியாவின் இயற்கை வேளாண்மை இயக்கத்தின் ஆணிவேராக உருவெடுத்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை பின்பற்றவும், இயற்கை வேளாண்மைக்கான சான்றிதழை அணுகவும், நிலையான உற்பத்திக்கு வழிவகை செய்யும் சந்தைகளுடன் இணையவும் இந்த திட்டம் விவசாயிகளுக்கு ஒரு தளத்தை வழங்கி உள்ளது.பாரம்பரிய விவசாய வளர்ச்சித் திட்டத்தின் கீழ், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 31500 நிதி உதவி வழங்கப்படுகிறது. இதில் பண்ணையில் மற்றும் பண்ணைக்கு வெளியே உள்ள இயற்கை உள்ளீடுகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 15000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
சந்தைப்படுத்தல், பேக்கேஜிங், பிராண்டிங், மதிப்பு கூட்டல் உள்ளிட்ட முயற்சிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 4500 நிதி உதவி வழங்கப்படுகிறது. இது தவிர, சான்றிதழ் மற்றும் கழிவுகளின் பகுப்பாய்வுக்காக 3 ஆண்டுகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 3000 வழங்கப்படுகிறது.ஜனவரி 30, 2025 நிலவரப்படி, 2015-16 முதல் 2024-25 வரை இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ. 2265.86 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6.12.2024 வரை தமிழ்நாட்டுக்கு சுமார் ரூ. 4250 லட்சம் வழங்கப்பட்டுள்ளது, 32940 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு அதன் மூலம் 37886 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் .
இது மட்டுமல்லாமல் பாரம்பரிய விவசாய வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு இயற்கை தயாரிப்பு என்ற பிராண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமான, ரசாயன பயன்பாடு இல்லாத இயற்கை வேளாண் நடைமுறையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் கடந்த 2019-20-ம் ஆண்டில் பாரம்பரிய விவசாய வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு துணை திட்டமாக இந்திய இயற்கை விவசாய முறையை தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 4,09,400 ஹெக்டேர் பரப்பளவில், 2,000 ஹெக்டேர் தமிழ்நாட்டில் உள்ளது