ஸ்டாண்ட்-அப் காமெடியன் பிரணித் மோர், தனது பார்வையாளர்களுடனான நகைச்சுவை நிகழ்ச்சியில் பேசிய “ரூ.370 பிரியாணி” என்ற கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.. இந்த நிலையில் தனது கருத்து தொடர்பான சர்ச்சைக்கு இறுதியாகப் பதிலளித்துள்ளார். இதுகுறித்து மன்னிப்பு வீடியோ வெளியிட்டுள்ள அவர் “இதைப் பற்றிப் பேச நான் நீண்ட நாட்களாக விரும்பினேன், ஆனால் எனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டிருந்தது. எனது வீடியோக்களில் ஒன்றை நீங்கள் பலர் பார்த்திருக்கலாம்..
அதற்காக எனக்குப் பலத்த எதிர்ப்பு மற்றும் விமர்சனங்கள் வந்தன. அந்த விமர்சனங்கள் நியாயமானவை என்றே நான் கருதுகிறேன். அந்த உரையாடலின் போது, அந்த நபர் பல இழிவான கருத்துகளைத் தெரிவித்தார். ஆனால் சுற்றியிருந்த அனைவரும் சிரித்ததால், நானும் அந்தச் சூழலில் ஒன்றிப்போய், என் முடிவெடுக்கும் திறனில் தவறு செய்துவிட்டேன்.
இது என் தரப்பில் நிகழ்ந்த ஒரு பெரிய தவறு என்று உணர்கிறேன். நான் நினைத்திருந்தால், அவரை அங்கேயே தடுத்திருக்கலாம் அல்லது அதற்கெதிராகக் குரல் கொடுத்திருக்கலாம். ஆனால் நான் அதைச் செய்யத் தவறிவிட்டேன். நான் அவருக்கு ஒரு மேடையை அமைத்துக் கொடுத்தேன், அதனால்தான் நிலைமை இந்த அளவுக்கு மோசமானது. இதனால் மனவேதனை அடைந்த அனைவரிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்..
மேலும் தற்போது நடைபெற்று வரும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் அதிகாரிகளுடன் நான் முழுமையாக ஒத்துழைத்து வருகிறேன். ஆனால், தயவுசெய்து எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு அளிக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். நான் ஒரு சிறந்த மனிதனாக மாற முடியும் என்பதை நிரூபிப்பேன். இது எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. இனி நான் என்னையும் எனது உள்ளடக்கத்தையும் (content) மேம்படுத்திக்கொள்ள உழைப்பேன். எதிர்காலத்தில் எனது படைப்புகளில் அந்த மாற்றத்தை நீங்கள் காண முடியும்.” என்றும் பேசியுள்ளார்..
ரூ. 370 பிரியாணி சர்ச்சை
குருகிராமில் நடைபெற்ற பிரணித் மோரின் (Pranit More) சமீபத்திய ‘ஸ்டாண்ட்-அப்’ நகைச்சுவை நிகழ்ச்சியின்போது, ஹிமான்ஷு ஜங்ரா என்ற பார்வையாளர் தனது டேட்டிங் (dating) அனுபவம் குறித்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார். அப்போது, டேட்டிங்கின்போது பிரியாணிக்காக ரூ.370 செலவழித்த பிறகு, அதற்குப் பதிலாகத் அந்த பெண்ணிடம் இருந்து ஏதோ ஒன்று கிடைக்க வேண்டும் என்று தான் உரிமை கோரியதாக அவர் கூறினார்.
தான் செலவழித்த தொகையைக் குறிப்பிட்டு, “நான் ரூ.370 செலவழித்ததால், அந்தச் செலவு வீண் போகாமல் பார்த்துக்கொள்ள நினைத்தேன்,” என்று அவர் கூறினார். இந்தக் கருத்து, பிரணித் உட்பட அங்கு கூடியிருந்த பல ஆண்களிடையே பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த உரையாடலின் ஒரு பகுதி சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு, விரைவாக வைரலானது.
இணையத்தில் பரவலான விமர்சனங்களை எழுப்பிய இந்த வீடியோவில், ஹிமான்ஷு மற்றும் பிரணித் ஆகிய இருவரும் பெண்களுக்கு எதிரான வெறுப்புணர்வையும் (misogyny) தவறான மனப்பான்மையையும் இயல்பானதாகக் காட்டுவதாகப் பல பயனர்கள் குற்றம் சாட்டினர். நிகழ்ச்சியின்போது இந்த உரையாடலை “சிறந்த குருகிராம் உள்ளடக்கம்” (Peak Gurgaon Content) என்று விவரித்ததும், பின்னர் அதைத் தனது சமூக ஊடகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பரப்பியதும் ஏன் என்று பலரும் பிரணித்திடம் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, ஆபாசமாக நடந்துகொண்டது மற்றும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பிரணித் மற்றும் ஹிமான்ஷு மீது மகாராஷ்டிர சைபர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்ணுக்கு எதிரான, அவரது விருப்பத்திற்கு மாறான நடத்தையைப் புகழ்ந்து பாராட்டியதற்கும், பாலியல் ரீதியான கட்டாயப்படுத்தலை ஊக்குவித்ததற்கும் பிரணித் மற்றும் ஹிமான்ஷு ஆகியோருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, ஹிமான்ஷு தனது வேலையிலிருந்தும் நீக்கப்பட்டார்.
மன்னிப்பு குறித்து சமூக ஊடகங்களில் கருத்து வேறுபாடு
சில பயனர்கள் பிரணித் மோர் மன்னிப்புக் கேட்க முன்வந்ததைப் பாராட்டினாலும், மற்றவர்களோ, இந்தச் சம்பவம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் நகைச்சுவை மற்றும் சிரிப்பிற்காக சர்ச்சைக்குரிய கருத்துக்களை இயல்பாக்குவது குறித்த பரந்த கவலைகளை எடுத்துக்காட்டுகிறது என்று பதிவிட்டு வருகின்றனர்…



