பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில், இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது கணவரான ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி மாடியில் இருந்து தவறி விழுந்ததாக குடும்பத்தினரிடம் கூறிய நிலையில், அவரது உடலில் காணப்பட்ட பலத்த காயங்கள் அந்தக் கூற்றில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஹோஷியார்பூர் மாவட்டம் முகேரியன் அருகே உள்ள சுனேஹ்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமா. இவருக்கும் அமர்ஜித் சிங் என்பவருக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். அமர்ஜித் சிங் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 13-ம் தேதி விடுமுறையில் வீட்டிற்கு வந்த அமர்ஜித் சிங்கிற்கும் ரமாவிற்கும் இடையே இரவு நேரத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மறுநாள் அதிகாலை சுமார் 4 மணியளவில் ரமா மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் சென்றது.
உடனடியாக ரமாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த ரமாவின் பெற்றோர், அவரது உடலில் இருந்த காயங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மாடியில் இருந்து விழுந்ததாக கூறப்பட்ட நிலையில், உடலில் பல இடங்களில் ஆழமான காயங்கள் இருந்தது குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனால், ரமாவின் மரணத்தில் விபத்து காரணம் இல்லை என்றும், அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய போலீசார், அமர்ஜித் சிங் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் அவரது மாமா குல்தீப் கூகி மற்றும் அத்தை சோனியா ஆகியோரையும் வழக்கில் சேர்த்துள்ளனர்.
இருவரும் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ரமாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அவரது மரணத்திற்கான மருத்துவ ரீதியான காரணம் தெளிவாகும் என போலீசார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தாயை இழந்தும், தந்தை கைது செய்யப்பட்ட நிலையிலும் இரண்டு குழந்தைகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: மனைவியுடன் தகராறு… ஒரு வயது மகளை ஆற்றில் வீசிய தந்தை!



