செங்கோட்டையனின் ஆதரவாளரான சித்துராஜ், பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் காலை செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘கெடு’ விதித்திருந்தார். அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலசோனையில் ஈடுபட்டார். பிரசார சுற்றுப்பயணத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி திண்டுக்கலில் தனியார் ஓட்டலில் தங்கியிருக்கும் நிலையில், அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ் பி வேலுமணி, காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தான் அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் செங்கோட்டையன், அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் செங்கோட்டையனின் மற்றொரு ஆதரவாளரான சித்துராஜ், பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்படும் அனைத்து கட்சி நிர்வாகிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சம்பவம் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.