தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. சமீபத்தில் பரவிய முக்கிய வதந்திகளில் ஒன்று, நடிகர் விஜய் தலைமையிலான அரசியல் சூழ்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் திரிஷா போட்டியிடலாம் என்றும், அவர் துணை முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டதாகும். ஆனால் இந்த தகவல்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் பட புரமோஷன் நிகழ்ச்சியில் திரிஷா அளித்திருந்த பழைய பேட்டி தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “சத்தியமா அதற்கு வாய்ப்பே இல்லை. நான் அரசியலுக்கு வர மாட்டேன். எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது” என்று தெளிவாக கூறியிருந்தார்.
இதனை தற்போது பரவி வரும் வதந்திகளுக்கு நேரடி மறுப்பாக ரசிகர்கள் பார்க்கின்றனர். 2002-ஆம் ஆண்டு மௌனம் பேசியதே படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான திரிஷா, தொடர்ந்து கில்லி, திருப்பாச்சி, அபியும் நானும், 96 உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரம் அவருக்கு மீண்டும் பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது.
தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற பின்னர் திருமணம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் அவரது வாழ்க்கையில் பேசப்பட்ட விஷயமாக இருந்தது. அதன்பிறகு அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் தனிமையாக வைத்துக்கொண்டு சினிமா பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கு முன்னர், ஒரு பேட்டியில் திரிஷா “எனக்கு முதலமைச்சராக வேண்டும் என்று ஆசை” என கூறியிருந்தார். நகைச்சுவையாக சொன்ன அந்த வீடியோவை வைத்து சமூக வலைதளங்களில் அவர் குறித்து மீம்ஸ்களும் ட்ரோல்களும் உருவாகி வந்தன. தற்போது விஜயின் அரசியல் வளர்ச்சியையும் இதனுடன் இணைத்து இணையத்தில் வதந்திகளை பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
Read more: தவெக ஆட்சிக்கு ஆதரவு தொடரும்.. கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையூறாக இருக்காது..! – வீரபாண்டியன் உறுதி



