தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர்களில் ஒருவராக விமல் திகழ்கிறார். ‘களவாணி’, ‘வாகை சூடவா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், தயாரிப்பாளராகவும் திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், அவர் தொடர்பான ரூ.4.5 கோடி காசோலை மோசடி வழக்கில் சென்னை நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
நடிகர் விமல் தயாரித்த ‘மன்னர் வகையறா’ திரைப்படத்திற்காக, பைனான்சியர் கோபி என்பவரிடம் ரூ.4.5 கோடி கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. படம் வெளியான பிறகும் அந்தத் தொகை திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், அதற்குப் பதிலாக காசோலை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அந்த காசோலை வங்கியில் செலுத்தப்பட்டபோது, கணக்கில் போதுமான பணம் இல்லாததால் அது திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, காசோலை மோசடி தொடர்பாக பைனான்சியர் கோபி, சென்னை 11-வது சிறப்பு நீதிமன்றத்தில் விமலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக விசாரணையில் இருந்து வந்த நிலையில், நடிகர் விமலும் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பிறகு, நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியது. அதில், விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், பெறப்பட்ட தொகையை சட்டப்படி திருப்பிச் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாக விமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கும் வகையில் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
Also Read: தினமும் இரவு இதை சாப்பிட்டு தூங்கிப் பாருங்க… மாற்றம் உங்களுக்கே தெரியும்!



