மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்போன் செயலி மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி அரங்கேறியுள்ள விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘எப்.கியூ.எல்’ (FQL) என்ற தனியார் நிதி நிறுவனத்தின் பெயரில் களமிறங்கிய ஏஜெண்டுகள், கிராமப்புறப் பெண்கள் மற்றும் பொதுமக்களை நேரில் அணுகி குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
இதனை உண்மை என நம்பிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தங்களின் சேமிப்பு மட்டுமின்றி கடன் வாங்கியும் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மேலூர் மற்றும் சிவகங்கை காவல் நிலையங்களை முற்றுகையிட்டு அடுத்தடுத்துப் புகார்களை அளித்தனர்.
இதையடுத்து, இந்த விவகாரத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு வழக்கானது பொருளாதாரக் குற்றப்பிரிவு (EOW) போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் இதுவரை 6 வழக்குகளைப் பதிவு செய்து, மோசடியில் தொடர்புடைய 17 முக்கிய ஏஜெண்டுகளைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இருப்பினும், முதலீடு செய்த பணம் முழுமையாக கைக்கு வராததால் பல குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன.
இந்தச் சூழலில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த ராசு (26) என்ற இளைஞர், இந்த FQL செயலியில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த விரக்தியில் இருந்துள்ளார். கடன் வாங்கி முதலீடு செய்த பணம் முழுமையாகப் பறிபோனதால் கடந்த சில நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்த அவர், திடீரென தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இளைஞரின் தற்கொலைக்கு காரணமான மோசடி நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் பதற்றமான சூழலும் நிலவி வருகிறது.
Read More : 2026-ல் கோரத் தாண்டவமாடும் இயற்கை..!! பூமியின் அழிவு ஆரம்பமா? நாம் கற்க வேண்டிய பாடம்..!!



