தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்தும் நோக்கில், பாட்டில் ஒன்றுக்கு 20 ரூபாய் வரை புதிய வரியை விதிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. காலியாகும் மது பாட்டில்களை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டும் ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை’ என்ற பெயரில் இந்த புதிய வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக, 2006-ஆம் ஆண்டின் மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்வதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய சட்டத் திருத்தத்தின்படி, மதுபானங்களின் வகை, அளவு மற்றும் அது அடைக்கப்பட்டுள்ள பாட்டிலின் தன்மைக்கு ஏற்ப கட்டண வீதங்களை அரசு நிர்ணயம் செய்யும். இந்தத் தீர்வை வரியைச் செலுத்தும் பொறுப்பு மதுபானங்களை விற்பனை செய்யும் வணிகர்களையே சாரும். இதன் மூலம் திரட்டப்படும் நிதி முழுமையாக சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளுக்கும், சமூகப் நலத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, காலியாகும் மது பாட்டில்களை சேகரித்து மறுசுழற்சி செய்வதற்கும், காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் சூழலியல் பணிகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும். இதுதவிர, மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் அமைத்தல், மதுவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குதல் மற்றும் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்வது போன்ற நற்பணிகளுக்கும் இந்த வருவாய் செலவிடப்படவுள்ளது.
Read More : கடன் வசூலிக்கும் ஏஜென்ட்டுகளுக்கு எச்சரிக்கை..!! RBI வெளியிட்ட புது ரூல்ஸ்..!! 1ம் தேதி முதல் அமல்..!!



