சித்தர்கள் இன்றும் உலா வரும் 6 புனித மலைகள்..! இந்த இடங்களுக்கு போயிட்டு வந்தாலே போதும்..!

Siddhar 2026

அஷ்டமா சித்திகளை வசப்படுத்தி, மூலிகை மருத்துவம், ரசவாதம், யோகம் மற்றும் ஞானத்தில் சிறந்து விளங்கிய சித்தர்களின் உலகம் இன்றும் வியக்கத்தக்க மர்மங்கள் நிறைந்ததாகவே உள்ளது. காலத்தை வென்று சூட்சும வடிவில் இன்றும் வாழ்ந்து வருவதாக நம்பப்படும் சித்தர்களின் ஆற்றல் நிறைந்த முக்கியமான 6 ஆன்மீக திருத்தலங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.


பொதிகை மலை :

சித்தர்களின் தலைமை குருவான அகத்திய முனிவர் வாழ்ந்து அருள்பாலித்த தலம் பொதிகை மலை. நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட எல்லையையொட்டிய மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இப்பகுதியில், அகத்தியர் உள்ளிட்ட பல சித்தர்கள் இன்றும் அரூபமாக வாழ்வதாக நம்பப்படுகிறது. இங்கு செல்லும் பக்தர்கள் பலர் இன்றும் பல்வேறு தெய்வீக அதிர்வுகளை உணர்வதாகக் கூறுகின்றனர்.

பழனி மலை :

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில், நவபாஷாண தண்டாயுதபாணி சுவாமி சிலையை வடித்த போகர் சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இங்குள்ள குகையில் போகர் சித்தர் இன்றும் முருகப்பெருமானை பூஜித்து வருவதாக ஐதீகம். மேலும், முருகனின் திருக்கர தண்டத்தில் உள்ள கிளி உருவம், அருணகிரிநாதரே கிளி வடிவில் அமர்ந்திருப்பதாகப் போற்றப்படுகிறது.

சதுரகிரி மலை :

‘சித்தர்களின் பூமி’ என அழைக்கப்படும் சதுரகிரி மலை, பதினெண் சித்தர்களும் தவமியற்றிய அரிய மூலிகைகள் நிறைந்த திருத்தலமாகும். மகாலிங்கம் கோவில் அருகே உள்ள ‘தவசி பாறை’ பகுதியில் அகத்தியர், கோரக்கர், ராமதேவர் போன்ற சித்தர்கள் இன்றும் சூட்சும வடிவில் சிவபெருமானை வழிபட்டு வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

திருவண்ணாமலை :

சிவபெருமானே அக்னி மலையாக வீற்றிருக்கும் திருவண்ணாமலை, சித்தர்களின் சங்கமமாக விளங்குகிறது. கிரிவலப் பாதையில் உள்ள குகைகள் மற்றும் 25-க்கும் மேற்பட்ட சித்தர் ஜீவ சமாதிகளில் ஞானிகள் தவமியற்றி வருகின்றனர். பௌர்ணமி கிரிவலத்தின் போது சித்தர்கள் பக்தர்களோடு பக்தர்களாக வலம் வந்து அருள் புரிவதாகக் கூறப்படுகிறது.

கஞ்சமலை (சேலம்):

சேலம் அருகே அமைந்துள்ள கஞ்சமலை, போகரின் குருவான காலங்கி நாதர் மற்றும் இடைக்காடர் சித்தரின் அருள் நிறைந்த தலமாகும். இங்குள்ள சித்தேஸ்வரர் ஆலயமும், 18 கி.மீ சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையும் பிரசித்தி பெற்றது. இத்தலத்தில் உள்ள ‘காந்த தீர்த்தத்தில்’ நீராடினால் தீராத நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

ஊதியூர் (காங்கேயம் – கொங்கண சித்தர்):

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஊதியூரில் பொன்னூதி மாமலை), 18 சித்தர்களில் தலைசிறந்த ரசவாத சித்தராக போற்றப்படும் கொங்கண சித்தர் தவம் செய்த புண்ணிய பூமியாகும். இங்குள்ள குகையில் தங்கி தவமிருந்த கொங்கண சித்தர், மூலிகைகளைக் கொண்டு இரும்பைப் பொன்னாக்கும் ரசவாத வித்தைகளை நிகழ்த்தியதாகவும், புகழ்பெற்ற ‘குளிகையை’ உருவாக்கியதாகவும் வரலாறு கூறுகிறது. இங்குள்ள உத்தண்ட வேலாயுதசுவாமி கோவில் மற்றும் கொங்கண சித்தர் ஜீவ சமாதி/தவ குகை ஆகியவை அதீத ஆன்மீக அதிர்வுகள் நிறைந்த இடங்களாக கருதப்படுகின்றன. இன்றும் பௌர்ணமி நாட்களில் இங்குள்ள குகையில் தியானம் செய்யும் பக்தர்களுக்கு மனத்தெளிவும் சித்தரின் சூட்சும அருளும் கிட்டுவதாக நம்பப்படுகிறது.

சித்தர் வழிபாட்டின் பலன்கள் :

சித்தர்களின் அருள் பெற விரும்புவோர் பௌர்ணமி மற்றும் அமாவாசை போன்ற ஆற்றல் மிகுந்த நாட்களில் இந்த ஜீவ சமாதிகளில் தியானம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சித்தர்களை மனதாரப் பிரார்த்திக்கும் போது வாழ்வின் கடுமையான பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைப்பதோடு, மன அமைதியும் தெய்வீக ஆற்றலும் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

Read More : ரூ.20 கோடி வரை ஏமாந்த மக்கள்..! ஏஜெண்டுகளின் வீடுகள் சூறை..! போலீஸ் வாகனங்கள் மீது கல் வீச்சு..! பரபரப்பு.. பதற்றம்..!

Next Post

கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டில் எப்படி வழிபட வேண்டும்? விரதம் கடைபிடிப்பது எப்படி?

Sat Aug 29 , 2026
மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அவதார தினமே ஆண்டுதோறும் ‘கிருஷ்ண ஜெயந்தி’ அல்லது ‘கோகுலாஷ்டமி’ என பக்தர்களால் பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் ‘கிருஷ்ண ஜென்மாஷ்டமி’ என அழைக்கப்படும் இந்நன்னாளில், பக்தர்கள் நாள் முழுவதும் விரதமிருந்து நள்ளிரவில் பாலகிருஷ்ணனை வழிபடுவது வழக்கம். கிருஷ்ணர் அவதரித்த மதுரா மற்றும் அவர் வளர்ந்த பிருந்தாவனத்தில் இத்திருவிழா பிரம்மாண்ட ஆன்மீக விழாவாகக் களைகட்டும். இந்து சாஸ்திரங்களின்படி, ஆவணி மாத தேய்பிறை […]
krishna janmashtami 3d898001a19a531c24ce18e03600b382 1

You May Like