மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கட்டையம்பட்டியில் FQL என்ற ஆன்லைன் முதலீட்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. ரூ.50 ஆயிரம் செலுத்தினால் 65 நாட்களில் ரூ.1 லட்சமும், ரூ.1 லட்சம் செலுத்தினால் ரூ.2 லட்சம் சம்பாதிக்கலாம் என்று இந்நிறுவனம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்தது. நிறுவனத்தின் ஏஜெண்டுகளான ரமேஷ், அவரது மனைவி அனிதா, விஜய், தினேஷ் ஆகியோரை நம்பி திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி, ரெட்டியபட்டி, வத்திபட்டி உள்ளிட்ட 20 கிராமங்களை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை என மொத்தம் ரூ.20 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.
இந்த சூழலில், இந்நிறுவனம் அலுவலகத்தை மூடிவிட்டு, பணத்தை சுருட்டிச் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. இதை அறிந்ததும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஏஜெண்டுகளின் வீடுகளை முற்றுகையிட்டனர். வீடுகள் மீது கற்கள் வீசி ஜன்னல் கண்ணாடிகள், ஏசி உள்ளிட்ட பொருட்களை உடைத்தனர். தகவல் அறிந்து வந்த தாசில்தார் டேனியல் பிரேம்குமார், இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால், ஏஜெண்டுகளை கைது செய்ய வேண்டும். தங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஏஜெண்டுகள் போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, போலீசார் மீதும் போலீஸ் வாகனங்கள் மீது மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு போலீசாரும் லத்தியால் அடித்து அங்கிருந்தவர்களை விரட்டினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. பின்னர், ஏஜெண்டுகளை பத்திரமாக மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Read More : என் பெயரை கெடுத்துட்டீங்க..! ரூ.1 கோடி நஷ்ட ஈடு கொடுங்க..! அமைச்சர் ஆதவ் வழக்கில் ஸ்டாலினுக்கு நோட்டீஸ்..!!



