மனிதர்களாகிய நாம் உயிர்வாழ உணவு இன்றியமையாத ஒன்று… அந்த உணவு உலக அளவில் மிகப்பெரியஅளவிலான வர்த்தகத்தை கொண்டுள்ளது. சத்தான உணவுக்காக நாம் என்ன வெல்லாம் செய்ய வேண்டி உள்ளது. விலைவாசி கூடும் நேரத்தில் அந்த உணவை நாம் பாதுகாக்க வேண்டும்.
பணம் இருப்பவர்கள் எவ்வளவு பணம் கொடுக்கின்றோம் என்பதை கணக்கில்வைத்துக் கொள்வதில்லை கணக்கில்லாமல் எதை வேண்டுமானாலும் எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுத்து வாங்கத் தயாராகிவிட்டனர். இன்று பணம் இருக்கின்றது வாங்குகின்றோம்! ஒருவேளை பணம் இருந்தும் வாங்க முடியாத காலம் வந்தால் என்ன செய்வோம் என்றாவது ஒரு நாள் நாம் இதைப் பற்றி யோசித்திருப்போமா !
ஏன் ?… நாம் இந்த நிலையை கண்கூடாக பார்த்துவிட்டோம் .. இலங்கையில் திடீரென பொருளாதார பிரச்சனை ஏற்பட்டது. எத்தனையோ பேரால் காசு கொடுத்து உணவை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. பாதி பேர் நாட்டை விட்டு அண்டை நாடுகளில்தஞ்சம் அடைந்தனர். மீதி பேர் வாழவே முடியாமல் தத்தளித்தனர். அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்தது.. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது. , போக்குவரத்து கட்டணங்கள் உயர்ந்தது, வீட்டு வாடகை உயர்ந்தது, கடும் நெருக்கடியை சந்தித்தது இலங்கை.
எது வேண்டுமானாலும் உயரட்டும் அதற்கு மாற்று ஏற்பாடு கண்டுபிடிப்பார்கள், பெட்ரோல் விலை ஏறினால் , சைக்கிளில் செல்லலாம்… பஸ் கட்டணம் உயர்ந்தால்.. நடந்து செல்லலாம், பெட்ரோல் விலை உயர்ந்தால் வாகனத்தை பயன்படுத்தாமல் கூட விட்டு விடலாம்.. ஆனால் உணவு என்பது இன்றியமையாதது.. ஒருவேளை சாப்பிடாமல் இருக்க முடியுமா? அப்படியே நாம் சாப்பிடாமல் இருந்தால் நமது குடும்பத்தார் , குழந்தைகள் சாப்பிடாமல் இருக்க முடியுமா..?
பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் : பண வீக்கத்தால் பிரேசில் நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவதியை சந்தித்தது. போதுமான உணவு கிடைக்கவில்லை.. விவசாய உற்பத்தியில் அந்நாடு முக்கிய நாடாக இருந்தாலும் , உணவுப் பொருட்களின் விலை உயர்வு பெரும் அழுத்தத்தை தந்தது. நியூசிலாந்து : இது போன்ற நிலையை நியூசிலாந்து சந்தித்துள்ளது. நாம் நினைப்போம் வெளிநாடு சொர்க்க பூமியாக உள்ளது என்று… ஆனால் அங்கு பார்த்தால்தான் தெரியும் எவ்வளவு அவதிப்பட வேண்டும் என்று.. அழகான அந்த நாடு கூட உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பால் பெரும் துயரத்தை சந்தித்திருக்கின்றது. இத்தாலி : கோவிட் காலத்தில் வர்த்தகத்தில் கடுமையான விளைவுகளை சந்தித்த நாடு இத்தாலி . குறிப்பாக இரும்பாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்கள் உக்ரேனில் இருந்துதான் வர வேண்டும் ஆனால் ரஷ்ய படை எடுப்பால் இது தடை பட்டது.
இந்தியா : நம் நாட்டிலும் பணவீக்கம் உள்ளது. ஆனால் பிற நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் பாதுகாப்பான இடத்தில் இருக்கின்றோம் என்பது ஆறுதல் தருகின்ற ஒரு விஷயம்தான். ஆனால் அதே நேரத்தில் சமீபத்தில் உலக பசி குறியீட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 121 நாடுகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா 107வது இடத்தில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் , வங்க தேசம் , நேபாளம் , இலங்கை போன்ற அண்டை நாடுகளை விட இந்தியா மோசமான நிலையில் இருப்பதாக பட்டியல் கூறுகின்றது. இருப்பினும் இதை இந்தியா மறுத்துள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் … அய்யய்யோ நினைக்கவே பயங்கரமாக உள்ளது.
நாம் என்ன செய்ய வேண்டும் ? : முதலில் நாம் செய்ய வேண்டியது உணவு வீணாக்குவதை தவிர்க்க வேண்டும். உணவு வீணாக்குவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. இதை நிறுத்தினாலே உணவு பஞ்சத்தில் இருந்து நாம் தப்ப முடியும் என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள். ஒரு ஆண்டில் மட்டும் ஒரு நபர் 50 கிலோ அளவிற்கு உணவை வீணாக்குவதாக தகவல்கள் கூறுகின்றது. ஒரு நாளைக்கு எத்தனையோ பேர் பசி , பட்டினியால் வாடுகின்றனர். அதே நேரத்தில் இதற்கு இணையாக உணவும் வீணாகின்றது. உணவு வீணாவதை தவிர்ப்போம் , உணவை பாதுகாப்போம்.. இதை பின்பற்றினாலே நாடு பஞ்சத்தில் இருந்து காக்கலாம்!!!