நடிகர் விஜயின் அரசியல் வரவு தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது தெரிந்ததே. விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் தீவிரம் காட்டின. இருப்பினும், சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், ‘முதலமைச்சர் வேட்பாளர் விஜய் தான் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பதே தமிழக அரசியலில் மிகப் பெரிய கேள்வியாக மாறியுள்ளது. 2011 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சுமார் 63 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்திருக்கிறது.
ஒருவேளை திமுக கூட்டணியில் அதிக இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்றால், காங்கிரஸில் சிலர் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இக்கூட்டணியின் எதிர்காலத்தைப் பற்றி விவாதங்கள் எழுந்து வந்தாலும், பீகார் தோல்விக்குப் பிறகு இந்த விவாதம் தீவிரமாகியுள்ளது.
இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பின் போது, திமுகவின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பிரச்சனைகள் காரணமாக, தொகுதி ஒதுக்கீட்டில் திமுக எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்கள் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திமுக தரப்பின் கவலைகளையும் ஸ்டாலின் எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம், காங்கிரஸ் தேசிய தலைமை திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி அரசியலில் பயணிக்கவே விரும்புகிறது என்று ப.சிதம்பரம் தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், தேர்தலை கருத்தில் கொண்டு விரைவில் தொகுதி பங்கீட்டுக்கான குழுவை அமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், திமுகவின் நிலைப்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுக்கும் திமுக தலைமை ஏற்கனவே தெளிவாக விளக்கம் அளித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நெருங்கும் சூழலில், “ஆட்சியில் பங்கு” என்ற விவகாரம் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கும் என்றும், திமுக தனிப் பெரும்பான்மை பெறாது என்ற தவறான பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும் அபாயம் இருப்பதாகவும் திமுகவினர் கூட்டணி கட்சிகளிடம் எடுத்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், தொகுதி பங்கீட்டில் கூட்டணியின் ஒற்றுமை காக்கப்படும் வகையில், சில சமரசங்களுக்கு திமுக தயாராக இருப்பதாகவும் கூட்டணி கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இந்த சந்திப்பு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
Read more: Breaking : குட்நியூஸ்..! ஒரே நாளில் ரூ.23,000 சரிவு.. இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் என்ன?



