லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்டாலின் விரைவில் நலம் பெற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.
2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற எழுச்சிப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்று இரவு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருவிடைமருதூர், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை செய்தார்.
மன்னார்குடியில் நடைபெற்ற உரையில், திமுக ஆட்சி மீது கடும் விமர்சனம் மேற்கொண்ட அவர், “அதிமுக ஆட்சியில் இரு முறை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று பயிர்க் கடனை வாங்க ‘சிபில் ஸ்கோர்’ கேட்கிறார்கள். திமுக அரசு பயங்கர கடன் அரசாக மாறியுள்ளது. அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைத்தது. இப்போது தினமும் கரன்ட் கட்!” என ஆதாரங்களுடன் தாக்கி பேசினார்.
திமுக கூட்டணி கட்சியினர் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை விமர்சனம் செய்கிறாங்க.. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் நீங்க ஏன் பதறுகிறீர்கள்.. அது எங்கள் விருப்பம்.. பாஜகவுடன் கூட்டணி வைத்ததுமே ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. அதிமுக கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சி, திமுக கூட்டணி வைத்தால் அது நல்ல கட்சியா? அதிமுக அரசை குறை சொல்ல எள் முனை அளவுக்கும் ஆதாரமில்லை, அதனால்தான் கூட்டணியை விமர்சிக்கிறார்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் வரும்போது எனக்கு கிடைத்த செய்தி.. முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்றனர்.. அவர் பூரண உடல்நலம் பெற என் சார்பில், உங்கள் சார்பில் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறினார்.
Read more: மனித மண்டை ஓடுகளால் கோபுரங்களைக் கட்டிய கொடூர மன்னர்கள் யார் யார்? வரலாற்றின் இருண்ட பக்கங்கள்..