பிரதமரின் கிசான் திட்டத்தில் மேலும் அதிக தமிழக விவசாயிகள் சேர்க்கப்படுவார்கள் என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வேலூரில் உள்ள வேளாண் அறிவியல் மையத்திற்கு மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் நேற்று வருகை தந்தார். பிரதமரின் தனம் தானியம் வேளாண் திட்டம், தேசிய பருப்பு வகைகள் இயக்கம், இயற்கை வேளாண்மை இயக்கம், பருப்பு வகைகள் மீதான தொகுப்பு முன்னணி செயல்விளக்கங்கள், கரிம உரங்கள் போன்ற பல்வேறு திட்டங்களின் சுமார் 500 பயனாளி விவசாயிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
இந்தத் திட்டங்களில் பங்கேற்பதன் மூலம் அவர்கள் எவ்வாறு பயனடைந்தனர், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளத் துறைகளில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அவர் விவசாயிகளிடமிருந்து கேட்டறிந்தார். தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த பிரதமரின் தனம் தானியம் வேளாண் திட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இத்திட்டத்தின் கீழ், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்கும் மத்திய அரசின் 11 அமைச்சகங்கள் செயல்படுத்தும் 36 திட்டங்களை ஒன்றிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த உரையாடலின் போது, மத்திய அரசின் ஆதரவுடன் தமிழக விவசாயிகள் அனைத்து வழிகளிலும் ஆதரிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஒருங்கிணைப்பு எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்து நான்கு வேளாண் அறிவியல் மையத் தலைவர்களிடமும் அவர் விசாரித்தார். எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் மற்றும் பல திட்டங்களில் இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் தங்கள் திருப்தியை வெளிப்படுத்தினர். பிரதமரின் கிசான் திட்டத்தில் மேலும் அதிக தமிழக விவசாயிகள் சேர்க்கப்படுவார்கள் என அமைச்சர் உறுதியளித்தார்.



