நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்து, மேற்குவங்க கடலோரப் பகுதியில் நிலவுகிறது. மகாராஷ்டிரா – கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 31-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வரும் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வெள்ளிக்கிழமை பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.