தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எழுச்சிபயணத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி உள்ளார். தென்மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார். இந்த நிலையில் தான் நேற்று கலசப்பாக்கம் மற்றும் போளூர் தொகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றினார்.
பின்னர், அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது, கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதனால் கடும் கோபமடைந்த எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்சை நிறுத்தி உள்ளே நோயாளிகள் யாரெனும் இருக்கிறார்களா? என பார்க்க சொன்னார். உள்ளே நோயாளிகள் யாரும் இல்லாத நிலையில், வேண்டுமென்றே கூட்டங்களுக்கிடையில் வெறுமனே ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை திமுக அரசு செய்து வருகிறது என கடுமையாக சாடினார்.
நோயாளி யாருமின்றி வெறுமனே செல்கிறது. இதை நான் 30 கூட்டங்களில் பார்த்துவிட்டேன். மக்களுக்கான கூட்டத்தை இடைநிறுத்தும் திமுகவினரின் இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலையில், அரசே இப்படி செய்கிறது. ஓட்டுனர் மீதும் ஆம்புலன்ஸ் வாகனம் மீதும் நாளை காவல்துறையிடம் புகார் அளிப்போம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து அதிகரித்துள்ள விலைவாசியை சாடிய இபிஎஸ், “அரிசி, பருப்பு, எண்ணெய் உள்பட மளிகைப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. இதைக் கட்டுப்படுத்தும் திறன் இந்த அரசுக்கு இல்லை. அதிமுக ஆட்சியில் விலை கட்டுப்பாட்டுக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கி, அண்டை மாநிலங்களில் இருந்து பொருட்களை வாங்கி மக்களுக்கு வழங்கினோம். ஆனால் இப்போது ஸ்டாலின் அரசு பொம்மை மாதிரி இருந்து விலைவாசி உயர்வை கவனிக்கவில்லை” என குற்றம்சாட்டினார்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் தருவதாக அறிவித்து கைவிட்டுவிட்டார். தூய்மை பணியாளர்களையும் கைவிட்டுவிட்டார். 100 நாள் வேலைத் திட்டத்தில் 150 நாட்கள் என்று சொன்னார்கள்; ஆனால் 50 நாட்களுக்கு குறைத்துவிட்டார்கள். மகளிர் உரிமைத் தொகை குறித்து திமுகவினர் எப்போதும் பெருமை பேசுகிறார். ஆனால் அதிமுக அழுத்தம் கொடுத்த பிறகே 28 மாதங்களுக்கு பின் வழங்கினார்.
சட்டமன்றத் தேர்தல் வருவதால் விதிகளை தளர்த்தி மேலும் 30 லட்சம் பேருக்குக் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இது குடும்பத் தலைவியின் நலனுக்காக அல்ல, தேர்தல் வாக்குகளுக்காக செய்யப்படும் நாடகம் என கடுமையாக சாடினார்.
Read more: நோட்…! எம்எட் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…!