நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. இதனையடுத்து சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது, நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் பெண் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பையும் அவர் சிறப்பித்து கூறினார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘நாரி சக்தி வந்தன் அதிநியம்’ (Nari Shakti Vandan Adhiniyam) சட்டத்தையும், கடந்த 40 ஆண்டுகளாக பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து நிலவி வந்த அரசியல் சவால்களையும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களின் பங்கை பாராட்டிய பிரதமர் மோடி, பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் பெருமளவிலான பெண் மக்கள் பிரதிநிதிகள் நாட்டை வழிநடத்தி வருவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது பிரியமான நாட்டுமக்களே, இன்று பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் நமது பெண் மக்கள் பிரதிநிதிகள் மிகப் பெருமளவில் நாட்டை வழிநடத்தி வருகின்றனர்; உள்ளூர் சவால்களைத் தீர்த்து, விதிவிலக்கான திறமையான மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட தலைமையை வழங்கி வருகின்றனர்,” என்றார்.
மேலும், “இதைக் கருத்தில் கொண்டுதான் நாம் நாடாளுமன்றத்தில் நாரி சக்தி வந்தன் அதிநியம் சட்டத்தை நிறைவேற்றினோம்,” என்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்த 40 ஆண்டுகால அரசியல் வரலாட்டை நினைவு கூர்ந்த பிரதமர், கடந்த நான்கு தசாப்தங்களாக இந்தப் பிரச்சினை அரசியல் சர்ச்சைகளில் சிக்கித் தவித்ததாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
“ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக, கடந்த 40 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இந்தத் கனவு அரசியல் விளையாட்டுக்கள் மற்றும் அரசியல் சண்டைகளுக்கு பலியாகிவிட்டது,” என்று அவர் குறிப்பிட்டதுடன், செங்கோட்டையில் இருந்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தனது வேண்டுகோளையும் விடுத்தார்.
“இன்று, செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து, மூவர்ணக் கொடியின் நிழலில் நின்று, நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நான் மனதார வேண்டுகோள் விடுக்கிறேன்: நமது பெண்களின் வலிமையையும் திறமையையும் கொண்டாடுவதற்கு அனைவரும் முன்வாருங்கள்,” என்றார் மோடி.
மாநில சட்டமன்றங்களிலும் மக்களவையிலும் பெண்களுக்கு 33 சதவீத பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். “நம் தாய்மார்களும் சகோதரிகளும் இந்தியாவின் கொள்கைகளை வடிவமைப்பதில் தீவிரமாகப் பங்களிக்கும் வகையில், மாநில சட்டமன்றங்களிலும் மக்களவையிலும் அவர்களுக்கு 33% பிரதிநிதித்துவம் கிடைப்பதை விரைவில் உறுதி செய்யுங்கள்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.



