தீபாவளியன்று வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மழைநீர் வடிகால் ஒப்பந்ததாரர்களின் ஊழியர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில், கேரளா – கர்நாடகா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 21-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தீபாவளியன்று வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மழைநீர் வடிகால் ஒப்பந்ததாரர்களின் ஊழியர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்தந்த நகராட்சிகளில் இருந்து மழைக்கால தடுப்பு பணிகளில் ஈடுபடவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



