ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்ச்சி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தள பதிவில், “டெட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். ஆசிரியர் தரம் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். எதிர்கால நியமனங்களுக்கு ‘டெட்’ ஒரு கட்டாயத் தேவையாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை தமிழக அரசு ஆதரிக்கிறது.
அதேநேரம் ஏற்கெனவே பணியில் இருந்த ஆசிரியர்களுக்கு இந்த தேவையை பின்னோக்கிப் பயன்படுத்துவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நடைமுறையில் இருந்த சட்டங்கள், விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். பல ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் மீது புதிய தகுதியை விதித்து, அவர்கள் தகுதி பெறவில்லை எனில் கட்டாய ஓய்வு அளிப்பது நியாயமானது அல்ல.
இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டால், பெருமளவிலான ஆசிரியர்கள் கட்டாய ஓய்வு பெற வழிவகுக்கும், இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும். வழங்கப்பட்ட குறுகிய காலத்தில் ‘டெட்’ தகுதி பெற்ற ஆசிரியர்களை சமமான எண்ணிக்கையில் பணியமர்த்தி பயிற்சி அளிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. இத்தகைய சூழலை தவிர்க்காவிட்டால் அது லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும்.
குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 புதிய நியமனங்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச தகுதிகளை ஒழுங்குபடுத்துகிறது. இது ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களின் கட்டாய ஓய்வுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. மேலும், 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய ஆசிரியர் கல்வி குழமம் டெட் தேர்வை அறிமுகப்படுத்திய போது, அந்த தேதிக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அதன் விதிகள் பொருந்தாது என்று தெளிவாகக் கூறியது. டெட் தேர்வை பின்னோக்கிப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. இந்த காரணங்களுக்காக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது
பணியில் உள்ள ஆசிரியர்களின் உரிமைகளை பாதுகாப்பதுடன், எதிர்கால நியமனங்களுக்கு டெட் தேர்வை கண்டிப்பாக பின்பற்றுவதன் மூலம் கல்வியின் தரம் மற்றும் ஆசிரியர்களுக்கான நீதி இரண்டையும் உறுதிசெய்வதில் தமிழகம் உறுதியாக உள்ளது. சீராய்வு மனு இந்த சமநிலையை அடைய முயல்கிறது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய இப்போது அணுகுவோம்.
இந்த பிரச்சினை சட்டம் மற்றும் அரசியலமைப்பு கொள்கைகளை மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தையும் உள்ளடக்கியது என்பதை அரசு வலுவாக முன்வைக்கும். ஆசிரியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கும், ஒவ்வொரு குழந்தையின் தரமான கல்வியைப் பெறுவதற்கான உரிமையும் பாதுகாப்பதற்கும் இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி, நியாயமான முடிவுக்கும் கொண்டு செல்வோம் என தெரிவித்துள்ளார்.



