மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் மீட்கப்பட்ட 8 மாதப் பெண் குழந்தையின் சடலம் தொடர்பான வழக்கில், தற்போது 45 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது குழந்தையின் கொலை குறித்து இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிப் பேசியதே, நீண்டகாலமாகத் தீர்வு கிடைக்காத இந்த வழக்கில் போலீஸாருக்கு முக்கியத் துப்பு கொடுத்துள்ளது.
கேரள மாநிலம் திருவல்லா அருகே புளிக்கிழ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சதுப்புநிலத்தில், 2023 ஆகஸ்ட் 12-ம் தேதி குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அப்போது வழக்குப் பதிவு செய்த போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் குற்றத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.
இந்தச் சூழலில், பாலக்காட்டைச் சேர்ந்த மஞ்சு (45) என்பவருக்கும் அவரது காதலன் சிவாவுக்கும் இடையே அண்மையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது குழந்தையின் கொலை தொடர்பாக இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வாக்குவாதத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள், சமூக நல ஒருங்கிணைப்பாளரிடம் தகவல் தெரிவித்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீஸார் மஞ்சுவை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையின்போது, குழந்தையை மூச்சுத்திணறடித்துக் கொன்றதாக மஞ்சு வாக்குமூலம் அளித்துள்ளார். 2023 ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு, சங்கனாச்சேரி கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிலையத்தில் உள்ள கடைத்திண்ணையில் சிவாவுடன் இருந்தபோது குழந்தை தொடர்ந்து அழுததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் குழந்தையின் உடலை மறைக்க உதவியதாகக் கூறப்படும் சிவாவின் சகோதரர் சக்தியும், கொலையில் நேரடித் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் சிவாவும் தற்போது தலைமறைவாக உள்ளனர். இருவரையும் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: பிக் பாஸ் தாமரைச் செல்வி வாழ்க்கையில் திடீர் திருப்பம்.. கணவர் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!



