சூரத் நகரில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய வேண்டிய பொருட்களைத் திருடி, அவற்றைச் சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் 26 வயது டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ரூ.4.60 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள செல்போன்கள், ஆப்பிள் ஏர்பாட்ஸ், ஸ்மார்ட்வாட்ச், ஆடைகள், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள கங்காஜலியா ஏரிக்கரை அருகே, உரிய ரசீதுகள் இன்றி செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை ஒருவர் விற்பனை செய்வதாக உள்ளூர் குற்றப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், ருத்விக் மக்வானா என்ற கோலி என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அவரிடம் பொருட்களுக்கான உரிமை ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவற்றைப் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
விசாரணையில், ருத்விக் மக்வானா சூரத்தில் ஃபிளிப்கார்ட் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வந்தது தெரியவந்தது. வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டிய விலை உயர்ந்த பொருட்கள் அடங்கிய பார்சல்களை எடுத்துச் செல்லும்போது, அவற்றைச் சேர வேண்டிய இடத்தில் ஒப்படைக்காமல் தன்வசம் வைத்துக்கொண்டு விற்பனை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 15 நாட்களுக்கு முன்பு இந்தப் பொருட்கள் திருடப்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் கூகுள் பிக்சல், சாம்சங், விவோ உள்ளிட்ட நிறுவனங்களின் 13 செல்போன்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் ஆப்பிள் ஏர்பாட்ஸ், புளூடூத் சாதனங்கள், ஃபயர்-போல்ட் ஸ்மார்ட்வாட்ச், பவர் பேங்க், சார்ஜர்கள் ஆகிய மின்னணுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்களின் கைக்கடிகாரங்கள், பல்வேறு பிராண்டுகளின் வாசனைத் திரவியங்கள், பாடி ஸ்பிரேக்கள், முகம் கழுவும் திரவங்கள், மாய்ஸ்சரைசர், பற்பசை, சோப்புகள், ஜீன்ஸ் பேன்ட்கள், டி-ஷர்ட்கள் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4,60,512 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
பாவ்நகரில் வசிக்கும் ருத்விக் மக்வானாவை, சூரத்தின் சாரோலி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக கங்காஜலியா காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Also Read: “இது இருந்தா நம்ம உல்லாசமா இருக்க முடியாது”.. காதலனுடன் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 8 மாதக் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!



