மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்தார்.. திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பரப்புரையில் ஈடுபட்டார்..
அப்போது பேசிய அவர் ” தமிழகத்திற்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன்.. தமிழ்நாடு மீது மட்டுமல்ல, தமிழ்மொழி மீதும் அளவற்ற அன்பு அதிகரித்து வருகிறது.. நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும், என் குடும்பம் தமிழ்நாட்டில் இருந்து வராவிட்டாலும் தமிழ் மண்ணோடு என் உணர்வு ஒன்றியிருக்கிறது.. எப்போதெல்லாம் தமிழ் கலாச்சாரத்தை தமிழ் மொழியை பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தாக்குகிறார்களோ அப்போது நான் தமிழராகவே உணர்ந்திருக்கிறேன்.. தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் தமிழ் மொழியையும் தாக்க இவர்களுக்கு என்ன தைரியம் என்று நினைப்பேன்..
நேற்று நாடாளுமன்றத்தில் ஒரு புதிய சட்டத்தை பாஜக கொண்டு வந்தனர்.. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வருவதாக அவர்கள் கூறினர்.. ஆனால் 2023-ம் ஆண்டிலேயே அந்த மசோதாவை கொண்டு வந்துவிட்டனர். நேற்று பாஜக கொண்டு வந்த பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு பின்னணியில் இருந்தது தொகுதி மறுவரையறை.. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது..
தென் மாநிலங்கள், தமிழ்நாடு, வடமாநிலங்களின் பலத்தை பலவீனப்படுத்தவே தொகுதி மறுவரையறை கொண்டு வரப்பட இருந்தது..
அந்த திட்டத்தை நேற்று நாங்கள் முறியடித்தோம்.. இந்தியாவின் கொள்கையை பாதுகாப்பதற்காக நேற்று அந்த மசோதாவை தோற்கடித்தோம்.. இந்தியா என்பது மாநிலங்களின் ஒரு தொகுப்பாகும்.. எனவே ஒவ்வொரு மாநிலத்திற்கு தங்கள் குரலை எழுப்புவதற்கான உரிமை உள்ளது.. தங்கள் மொழி, கலாச்சாரத்தை காப்பதற்கான உரிமை மாநிலத்திற்கு உரிமை உள்ளது..
ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என்று பிரதமர் மோடி சொல்லும் போது அவர் இந்திய அரசியலமைப்பு சட்டம் மீது தாக்குதல் நடத்துகிறார்.. பாஜகவும், ஆர்.எஸ்.எஸும் இந்த மண்ணில் என்ன செய்ய நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..
தமிழ் மொழி, தமிழ் வரலாற்றை, தமிழ் கலாச்சாரத்தை அழிக்க பாஜக விரும்புகிறது.. அவர்கள் அதை செய்ய நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.. பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் தமிழ் மக்கள் யார் என்பது தெரியவில்லை.. தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ் எவ்வளவு முக்கியம் என்பது அவர்களுக்கு புரியவில்லை. அழிக்க முடியாத, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றை தமிழ் மக்கள் வைத்திருக்கின்றனர் என்பது பாஜகவுக்கு புரியவில்லை.. இது தான் உண்மை..
டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள வேண்டும், அதற்காக அவர்களுக்கு ஒரு பார்ட்னர் வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.. அமித்ஷா, மோடிவிடம் இருந்து உத்தரவை பெறும் ஒரு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டும்..
டொனால்ட் டிரம்புக்கு எப்படி சமரசம் செய்யப்பட்ட பிரதமர் மோடி தேவையோ அதே போல் அவர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சமரசம் செய்யப்பட்ட முதலமைச்சர் தேவை.. பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட மசோதாவை நாங்கள் நேற்று தோற்கடித்தோம்.. தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி, தமிழ் பண்பாடு ஆகியவற்றை பாஜக, ஆர்.எஸ்.எஸ்.ஆல் தொடக்கூட முடியாது..” என்று தெரிவித்தார்..
Read More : “நாக்கு இருக்குன்னு பேசாதீங்க.. அசிங்கமா போயிடும்..” செங்கோட்டையனுக்கு இபிஎஸ் எச்சரிக்கை..!



