வரும் வாரங்களில் உலகின் காலநிலையை தீவிரமாக மாற்றியமைக்கக்கூடிய ஒரு “சூப்பர் எல் நினோ” (Super El Niño) உருவாகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. புவி வெப்பமடைதலால் ஏற்கனவே வெப்பமடைந்துள்ள இந்தப் பூமியின் மீது, இந்த எல் நினோவின் தாக்கம் இன்னும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த முறை உருவாகும் சூப்பர் எல் நினோ, கடந்த பல தசாப்தங்களாக காணப்படாத ஒரு தீவிர நிலையில் இருக்கக்கூடும் என்றும், இது உலகம் முழுவதும் கடுமையான காலநிலை மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.. இதனை உலக வானிலை அமைப்பு (WMO) தெளிவுபடுத்தியுள்ளது.
எல் நினோ என்றால் என்ன?
எல் நினோ என்பது பொதுவாக, வெப்பக் காற்றுகளின் காரணமாக பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீரில் ஏற்படும் வழக்கத்திற்கு மாறான அதிகப்படியான வெப்பநிலையாக வரையறுக்கப்படுகிறது. விஞ்ஞானிகளின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, பசிபிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் உள்ள நீரின் வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. அந்தப் பெருங்கடலில் மிகப்பெரிய வெப்ப அலைகள் அதிவேகமாகக் கிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. வரும் நாட்களில் நாம் மிகப்பெரிய வானிலை அச்சுறுத்தலை எதிர்கொள்ளவிருக்கிறோம் என்றும், இது ஒரு சாதனை அளவை எட்டக்கூடிய எல் நினோவாக அமையலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய கடுமையான தாக்கம்
காலநிலை மாற்றத்தால் ஏற்கனவே கடும் வெப்பத்தை தாங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகிற்கு, இந்த எல் நினோ மேலும் ‘எரிபொருளைச் சேர்ப்பது’ போல அமையும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார். இதன் விளைவுகள் எல்லைகளைக் கடந்து மிக விரைவாகப் பரவும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பொதுவாக, ஒரு வலுவான எல் நினோ ஏற்படும்போது, உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமான வானிலை நிலைகள் உருவாகின்றன. தென் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கடுமையான வறட்சியும் காட்டுத்தீயும் ஏற்படுகின்றன. அதே நேரத்தில், அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் கனமழையும் வெள்ளப்பெருக்கும் உண்டாகின்றன. இது உலகம் முழுவதும் நீர் வளங்கள், வெப்பநிலை மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளைப் பாதிக்கிறது.
இந்தியாவின் மீது எல் நினோவின் தாக்கம்
இந்தியாவை பொறுத்தவரை, எல் நினோ காரணமாகப் பருவமழையானது கடுமையாகப் பலவீனமடைகிறது. இது மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்கக் குறைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.. அதாவது இந்த ஆண்டு வழக்கமாக பெய்யும் பருவ மழையை விட மழையின் அளவு குறைவாகவே இருக்கும்.. இதன் விளைவாக நாடு முழுவதும் உள்ள விவசாயத் துறைக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
பயிர் விளைச்சல் குறைந்து, உணவுப் பொருட்களின் விலைள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர வாய்ப்புள்ளது.. விநியோகச் சங்கிலி (supply chain) சீர்குலைவதால், பொருளாதாரங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இயற்கையாக ஏற்படும் இந்த எல் நினோ நிகழ்வானது, மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்துடன் இணையும்போது, எத்தகைய பேரழிவுகள் நிகழுமோ என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். இந்த எல் நினோவால் பாதிக்கப்படக்கூடிய 2027-ஆம் ஆண்டானது, வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டாக ஒரு புதிய சாதனையைப் படைக்கக்கூடும் என்று மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தச் சூழல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஒரு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.



