வேலூரில் பெண் ஜிம் உரிமையாளரை குறிவைத்து மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்த தம்பதியை, வேலூர் நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவருக்கு எப்சியா என்ற மனைவி உள்ளார். கணவன் மனைவி இருவரும், அருகில் உள்ள ஜிம் ஒன்றை நடத்தி வரும் பெண் உரிமையாளர் ஒருவருடன் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், தங்களது வீட்டில் பிறந்தநாள் விழா நடைபெறுவதாக கூறிய அந்த தம்பதி, ஜிம் உரிமையாளரான அந்தப் பெண்ணை தங்களின் வீட்டிற்க்கு அழைத்துள்ளனர். இதனால் அந்தப் பெண்ணும், மணிவண்ணன் மற்றும் எப்சியாவின் அழைப்பை ஏற்று பிறந்தநாள் விழாவிற்குச் சென்றுள்ளார்.
அங்கு வந்த அந்தப் பெண்ணிற்கு, கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளனர். இது குறித்து அறியாமல் அந்த குளிர்பானத்தைக் குடித்த பெண் சிறிது நேரத்திலேயே மயங்கி உள்ளார். இதையடுத்து, மணிவண்ணன் அந்தப் பெண்ணைக் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல், அவரது மனைவி எப்சியா அதை தனது செல்போனில் முழுமையாக வீடியோ எடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மயக்கம் தெளிந்த பிறகு, கணவன் மனைவி இருவரும் தாங்கள் எடுத்த வீடியோவைக் காட்டியுள்ளனர். மேலும், நீ எங்களுக்கு பணம் தரா விட்டால், இந்த வீடியோவை இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பதறிப்போன அந்தப் பெண், தன்னிடம் இருந்த ரூ.4.50 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் பல சவரன் தங்க நகைகளைக் கொடுத்துள்ளார்.
பணம் மற்றும் நகைகளைப் பறித்த பிறகும், அந்த தம்பதியர் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், நடந்த சம்பவம் குறித்து வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். மேலும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், சத்துவாச்சாரியில் தலைமறைவாக இருந்த எப்சியா மற்றும் மணிவண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



