தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.. கரூர் துயர சம்பவத்திற்கு பின் விஜய் பொது வெளியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது..
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் “ புதுச்சேரி அரசு தமிழ்நாட்டில் இருக்கும் திமுக அரசு மாதிரி கிடையாது.. வேறொரு கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும் பாரபட்சம் காட்டாமல், மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர்.. அதற்காக புதுச்சேரி முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.. இதை பார்த்தாவது தமிழ்நாட்டில் இருக்கும் அரசு கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்.. ஆனால் அவர்கள் கற்றுக் கொள்ள மாட்டார்கள்.. வரும் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுப்பார்கள்.. புதுச்சேரி மக்கள் திமுகவை நம்பாதீங்க.. நம்ப வைத்து ஏமாற்றுவது தான் அவர்களின் வழக்கம்” என்று தெரிவித்தார்..
இந்த நிலையில் எத்தனை சூழ்ச்சி செய்தாலும் தவெகவின் அரசியல் பயணத்தை திமுகவால் முடக்க முடியாது என்று விஜய் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மாநில மக்களுக்கு என் அன்பான வணக்கம். எல்லைகள் கடந்து, மொழியாலும் மனத்தாலும் எப்போதும் இணைந்திருக்கும் நாம், ஒரு புதிய அரசியல் வரலாற்றுக்கான அத்தியாயத்தை இன்று புதுச்சேரி மண்ணில் தொடங்கியிருக்கிறோம்.
நிலப் பரப்பிலும், நிர்வாகக் கட்டமைப்பிலும் சிறிய யூனியன் பிரதேசம் என்றாலும், கட்சி பேதமின்றி, வெறுப்புணர்வின்றி எதிர்க்கட்சியான நம் நிகழ்வுக்கு மிகப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்து நம் பாதுகாப்பிலும் பொதுமக்கள் பாதுகாப்பிலும் ஜனநாயக அரசியல் மாண்போடு புதுச்சேரி அரசு நடந்துகொண்டிருக்கிறது.
அந்த வகையில், புதுச்சேரி அரசுக்கும் முதல்வர் அவர்களுக்கும் உள்துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் புதுச்சேரி மாநிலக் காவல் துறைக்கும் நமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். எழுச்சி மிக்க நம் இளைஞர் படையினரும் கட்டுக்கோப்பும் பொறுப்பும் மிக்கவர்கள் என்பதை அவதூறாளர்களுக்குப் புரிய வைத்துள்ளார்கள்.
அதிகாரத்தை வைத்துக்கொண்டு, சட்டத்தை வளைத்து, சூழ்ச்சிகள் உட்பட என்னென்னவோ திட்டம் போட்டு நம் அரசியல் பயணத்தை, மக்கள் சந்திப்பை, பிரசார முன்னெடுப்புகளை இந்தக் கபட நாடகத் தி.மு.க. அரசு தடுக்கப் பார்த்தாலும், முடக்க முயன்றாலும், அது அணுவளவும் நடக்காது. கழகத்தின் எதிர்பார்ப்பை, வேண்டுகோள்களை, உத்தரவுகளை மனதார மதித்து, நிகழ்வை வெகு வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த, அதற்குக் காரணமாயிருந்த தமிழகம், புதுச்சேரி மக்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி! வென்று காட்டுவோம்! வாகை சூடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : இரண்டரை கோடி தொண்டர்களுக்கு செங்கோட்டையன் துரோகம் செய்துவிட்டார்..!! – சித்தப்பா மீது பரபர குற்றச்சாட்டு..



