கடந்த 20-ம் தேதி தனது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.. ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தன்னை போக விடாமல் செய்யவே இந்த சோதனை நடந்ததாக அவர் கூறியிருந்தார்.. எனினும் செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை என வருமான வரித்துறை மறுத்திருந்தது.. இதையடுத்து வருமான வரி சோதனை நடந்ததற்கான ஆதாரத்தை இன்று வெளியிடப்போவதாக செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்..
இந்த நிலையில் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்..
தொடர்ந்து பேசிய அவர் ” கடந்த 12 ஆண்டுகளாக நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம்.. படப்பை பகுதியில் பரப்புரை செய்த போது தமிழ் பேச தெரியாத அதிகாரிகள் என்னை வழிமறித்தனர்..
எனக்கு தேர்தல் பணியாற்றிய திமுக நிர்வாகி படப்பை மனோகரன் வீட்டில் வருமான சோதனை நடைபெற்றது.. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.. வருமான வரித்துறையின் சோதனை செய்த போது சிசிடிவி கேமராக்களை அணைத்தது ஏன்..? சோதனை என்ற பெயரில் வருமான வரித்துறையினர் அட்டூழியம் செய்கின்றனர்.. காய்கறி வாங்கும் பையில் கூட சோதனை செய்தனர்.. இல்லாத பணத்தை எங்கே என்று கேட்டு அட்டூழியம் செய்தனர்..
ஆனால் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவில்லை என்று அப்பட்டமாக பொய் கூறுகின்றனர்.. சோதனை நடத்தினோம் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் உண்மையை சொல்ல வேண்டியது தானே.. வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் தவறில்லை.. அதனை மறைப்பது ஏன்..? சோதனைக்கு வந்த அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. சோதனை தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட வேண்டும்.. ” என்று தெரிவித்தார்..



