தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு கடந்த மாதம் அறிவித்தபடி இன்று தொடங்குகிறது.
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு கடந்த மாதம் அறிவித்தபடி இன்று தொடங்குகிறது. பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் அப்பாவு தலைமையில் நேற்று நடைபெற்றது. பாஜக, கம்யூனிஸ்ட்கள் தவிர்த்து மற்ற கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். பாமக சார்பில் ஜி.கே.மணி பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு: அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டப்பேரவைக் கூட்டம் அக்டோபர் 14 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும்.
இன்று காலை 9.30 மணிக்கு பேரவைகூடியதும், முன்னாள் எம்எல்ஏக்கள் 8 பேர் மற்றும் முக்கிய தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். 15-ம் தேதி (நாளை) கூடுதல் மானியக் கோரிக்கை பேரவைக்கு அளிக்கப்படும். 16-ம் தேதி விவாதம், 17-ம் தேதி விவாதத்துக்கு பதில் உரை அளிக்கப்படும் என்றார்.
தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் மயக்கமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பள்ளி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில்இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. அதேபோல, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ மற்றும் சாலைப் பிரச்சாரங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் அடங்கிய கண்காணிப்புகுழுவையும் அமைத்தது. இந்த கரூர் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புள்ளது.



