சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்களில் டெண்டர், கொள்முதல் மற்றும் , நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய டிஸ்க்கள் திருப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
கடந்த மாதம் 16, 17 தேதிகளில் ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது..
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு மேற்கொண்டார்.. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த மாதம் சிலரை பணியிடம் நீக்கம் செய்தோம். அதன் பிறகு இது நடந்ததா என கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
எந்த நோக்கத்தில் ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.. ஒப்பந்த தொழிலாளர் தொடர்பான ஆவணங்களும் காணாமல் போய் உள்ளது. இதை திருடியது யார்? இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? என்ன மாதிரியான தகவல்களுக்காக இது திருடப்பட்டது என அனைத்தும் விசாரணை செய்து கண்டுபிடிக்கப்படும். ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட விவகாரத்தில் யாரும் தப்ப முடியாது” என்று தெரிவித்தார்..
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தவெக அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.. மேலும் “ மின் விநியோகத்திற்கான ஆய்வுக் கூட்டத்தை கூட தற்போதைய மின்துறை அமைச்சர் முழுமையாக நடத்தவில்லை. சீரமைக்கப் போகிறோம் என்று சொலின்றனர். முதலில் மின்வெட்டை சரி செய்ய வேண்டும்.. பின்னர் துறைகளை சீரமைத்துக் கொள்ளலாம்..
மின் துறையில் தவறுகள் நடப்பதை போன்ற தோற்றத்தை தான் தவெகவினர் உருவாக்குகின்றனர். மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்பும் ஒரு முயற்சியாகவே ஹார்டு டிஸ்க் மாயம் என்று கூறப்படுகிறது.. புதிய அரசு அமைந்த பிறகும் தொழில் முதலீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு கூட ரீல்ஸ் பயணத்தை தான் முன்னெடுக்கிறார்கள்.
இது ரியல் ஆட்சி இல்லை ரீல்ஸ் ஆட்சி தான் என்பது இப்போதே மக்களுக்கு புரிந்துவிட்டது.. இன்னும் போகப்போக மக்கள் அதை முழுமையாக உணர்வார்கள். திமுகவை அழிப்பேன் ஒழிப்பேன் என்று வந்தவர்கள் எல்லாம் அவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்கள்.
புதிய அரசு அமைந்தால் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அவகாசம் கேட்கலாம், ஆனால் சட்டம் ஒழுங்கு பாதிப்புகளை சீர்படுத்த அவகாசம் கேட்கக் கூடாது.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை இந்த அரசு சரி செய்ய வேண்டும்.. துறை சார்ந்த நிர்வாக திறனின்றி அரைகுறையாக அமைச்சர்கள் இருக்கின்றனர். ஆடத்தெரியாதவன் வீதிக் கோணல் என்பது போல் அமைச்சர்கள் பேசுகின்றனர்..” என்று தெரிவித்தார்…



