அதிமுக அரசு அமைந்ததும் கோரைப்பாய் நெசவு செய்பவர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தில் கீழ்பென்னாத்தூரில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நாமெல்லாம் விவசாயிகள். அதிமுக 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களைக் கொடுத்து பொற்கால ஆட்சியைத் தந்தது. மழை, வெள்ளம் எதுவுமே பிரச்சினையாக இருக்கவில்லை. திமுகவின் 51 மாத ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. ஒவ்வொரு தொகுதிக்கு நான் செல்லும்போதும் மக்களிடம் ஆலோசனை நடத்துகிறேன். இந்த ஆட்சியை அகற்றுவதற்கும் அதிமுக அரசு அமைப்பதற்கும் மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். திமுக, கூட்டணிக் கட்சிகளை நம்பியுள்ளது, அதிமுக மக்களை நம்பியுள்ளது. எங்களைப் பொறுத்தவரை மக்களை நம்புகிறோம். மக்கள் தான் நீதிபதிகள்.
51 மாத ஆட்சியில் அமலாக்கத்துறை வீடுவீடாக கதவைத் தட்டுகிறது, இன்று கூட ஒரு அமைச்சர் வீட்டில் ரெய்டு. அப்படி என்றால் ஊழல் நடந்திருப்பதாகத்தானே அர்த்தம். ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எத்தனை அவதாரம் எடுத்தாலும், திட்டங்களுக்கு எப்படி பெயர் வைத்தாலும் உங்கள் ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல் இது. ஒரு மாதத்துக்கு ஒரு பெயர் வைப்பார் அதோடு முடிந்துபோகும். இதுவரை 52 குழு போட்டிருக்கார் அவை எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. எல்லாமே நாடகம்.
தாலிக்குத் தங்கம் திருமண உதவித் திட்டத்தையும் நிறுத்திவிட்டனர், இத்திட்டமும் அதிமுக ஆட்சி அமைந்ததும் தொடரும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்ததையும் நிறுத்திவிட்டனர். எங்கள் கூட்டணி 210 இடங்களில் வெல்லும், அதிமுக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும். கோரைப்பாய் நெசவு செய்பவர்கள், ஏற்கனவே கைத்தறி நெசவாளர்களுக்கு கொடுப்பதை போல தங்களுக்கும் குறிப்பிட்ட யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதிமுக அரசு அமைந்ததும் கோரைப்பாய் நெசவு செய்பவர்களுக்கும் குறிப்பிட்ட அளவு யூனிட் இலவசமாக வழங்கப்படும் என்றார்.