முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் முதன்மையானதும் மகத்தானதுமாக கந்த சஷ்டி விரதம் விளங்குகிறது. திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த 6 நாட்களை பக்தர்கள் கந்த சஷ்டி நாட்களாக விரதமிருந்து வழிபடுகின்றனர். இக்காலகட்டத்தில் உடல்நிலைக்கு ஏற்றவாறு உணவு தவிர்த்தோ அல்லது கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தோ வழிபாடு மேற்கொள்வது வழக்கம். எனினும் உடல் உபாதைகள், அலுவலக பணிச்சுமை அல்லது தவிர்க்க முடியாத இக்கட்டான சூழல் காரணமாக விரதம் இருக்க இயலாதவர்களும், விரிவான பூஜைகள் செய்ய முடியாதவர்களும் முருகனின் திருவருளை முழுமையாக பெறுவதற்கு ஒரு எளிய ஒருவரி மந்திரம் வழிவகுக்கிறது.
இந்த மந்திர வழிபாட்டிற்கு எந்தவித கடுமையான விதிகளோ அல்லது தீட்டு தடைகளோ கிடையாது. பெண்கள் மாதவிடாய் காலத்திலும் தயக்கமின்றி இதனை ஜபிக்கலாம்; குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எவ்விடத்தில் இருந்தும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வழிபாடு செய்வதற்கு முன்பாக முகம், கை மற்றும் கால்களை நீரால் சுத்தமாக கழுவிக்கொண்டு, அமைதியான இடத்தில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.
முதலில் முருகப்பெருமானை மனதில் நிலைநிறுத்தி, தங்களுக்கு தேவையான குறிப்பிட்ட ஒரு கோரிக்கையை முழு நம்பிக்கையுடன் அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து, ”ஐயும் கிலியும் சரவணபவ” என்ற எளிய மந்திரத்தை தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை மனதிற்குள் நிதானமாக ஜபிக்க வேண்டும். 10 நிமிடங்கள் நிறைவடைந்த பின்னர், மீண்டும் தங்களது வேண்டுதலை முருகனிடம் நினைவுகூர்ந்து வழிபாட்டை முடித்துக் கொள்ளலாம். கந்த சஷ்டியின் ஆறு நாட்களும் தொடர்ந்து இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால், விரதம் இருந்த முழு பலனும் கிடைத்து நினைத்த காரியங்கள் தடையின்றி கைகூடும் என்பது ஆன்மிக நம்பிக்கையாகும்.
Read More : தங்கம், வெள்ளி விலை மேலும் உயருமா? இறக்குமதிக்கு ஜிஎஸ்டி விதித்த மத்திய அரசு! நகைப்பிரியர்கள் ஷாக்!



