திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த பெரியசாமி (77). இவரது மனைவி புஷ்பாத்தாள்(65). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில், திருமணம் ஆகாமல் பெற்றோருடன் இருந்துள்ளார். இரண்டாவது மகனுக்கு திருமணம் ஆன நிலையில் மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.
இதனிடையே கூலி வேலை செய்து வந்த பெரியசாமி வயது மூப்பு காரணமாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். இதனால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கோழி மற்றும் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். ஆனால் அந்த பணத்தை பெரியசாமியிடம் குடுக்காமல் புஷ்பாத்தாவே வைத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.
இதனால் பெரியசாமி ஒவ்வொன்றுக்கும் மனைவியிடம் பணம் வாங்கி வாங்க வேண்டிய சூழல் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெரியசாமி பணம் கேட்கும் போதெல்லாம் மனைவி கொடுக்க மறுத்து அவரை தொடர்ந்து திட்டி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று இரவும் பணம் விஷயமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி கட்டையால் மனைவியை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார். புஷ்பத்தாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு புஷ்பாத்தாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து கணவன் பெரியசாமியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



