தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு தொடர்பான வழக்கை சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வறுமையால் வாடும் விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி கிட்னியை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு மற்றும் திருச்சியை சேர்ந்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து, முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையிலான குழு விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
வினீத் தலைமையிலான அதிகாரிகள் குழு கடந்த ஜூலை 22 ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டது. இந்த குழுவில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மாரிமுத்து, துறை இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். தனியார் மருத்துவமனைகள் தவறான முறையில் சான்றுகள் சமர்ப்பித்தும், பணத்திற்காக தரகர்கள் மூலம் உறுப்புகளை பெற்று மனித உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளன என்பதும் தெரிய வந்தது. மேலும், தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த Transplant Coordinator மூலம் சில ஆவணங்கள் முறைகேடாக தயார் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனால், இந்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கும், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநில அதிகார நியமன அலுவலர் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர், முறைகேடாக அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்ட குறிப்பிட்ட 2 தனியார் மருத்துவமனைகள் மீது முழுமையான விசாரணை செய்திட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு தொடர்பான வழக்கை சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.