அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், எம்ஜிஆரின் நெருங்கியவராகவும் திகழ்ந்த செங்கோட்டையன், ஜெயலலிதாவுக்கு எதிர்காலத்தில் வலுவான ஆதரவாளராக இருந்தவர் என்பது அனைவரும் அறிந்த தகவல். 9 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்று, அமைச்சரவையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.
ஆனால் கடந்த சில மாதங்களாக, அவர் மற்றும் தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிய வருகிறது. அத்திக்கடவு–அவிநாசி திட்ட விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் புறக்கணித்தது, எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் விலகியது, சமீபத்தில் நடந்த “மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” பேரணியிலும் பங்கேற்காதது போன்றவை இதற்கான சான்றுகளாகக் கூறப்படுகின்றன.
இந்நிலையில், செப்டம்பர் 5 ஆம் தேதி காலை 9 மணிக்கு செய்தியாளர்களிடம் தனது மனநிலையை வெளிப்படையாகப் பகிர இருப்பதாக செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதற்காக இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அந்தக் கூட்டத்தில் பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி, நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஒரு வேளை செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து விலகுவாரா, இல்லை ஓபிஎஸ்ஸுடன் இணைவாரா, அல்லது பாஜகவில் இணைவாரா என்றெல்லாம் சந்தேகங்கள் எழுந்துள்ளன. வரும் 5ஆம் தேதி செங்கோட்டையன் எப்படியான நிலைப்பாடு எடுக்கப் போகிறார் என்பது அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கேள்வியாக மாறியுள்ளது. அதிமுகவில் நிலவும் உள் கட்சி பூசல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.