மதுரையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி மதிப்பில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தியாகியுள்ளன. அப்போது அவர் கூறியதாவது:- மாநிலம் சிறப்பாக இருந்தால்தான் முதலீடுகள் கிடைக்கும்: தூங்கா நகரம் என்று கூறுவதை விட விழிப்புடன் இருக்கும் நகரம் என்றே மதுரையை கூறலாம்.
ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தை தொழில் முதலீட்டாளர்களின் முகவரியாக மாற்றினோம். முதலீடுகள் சாதாரணமாக கிடைத்துவிடாது; ஒரு மாநிலம் சிறப்பாக இருந்தால்தான் நிறுவனங்கள் முதலீடு செய்யும். முதல்வர் கேட்டுக் கொண்டார் என்பதற்காக யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள்.
சட்டம், ஒழுங்கு தொழிலுக்கு உகந்த சூழல் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தே நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. முதலீட்டாளர்களின் முகவரியாக தமிழ்நாடு உள்ளது. ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளோம். மதுரை கோயில் நகரமாக இருந்தால் மட்டும் போதுமா? தொழில் நகரமாக மாற்ற வேண்டும்.
பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தொழில்களை மதுரையில் நிறுவியுள்ளன. மதுரையை தொழில் நகரமாக்குவதே ஆசை. மேலூரில் 278.26ஏக்கரில் பிரமாண்ட சிப்காட் தொழில் நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். நாட்டிலேயே அதிக பெண்கள் பணிபுரியும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று கூறினார்.
மேலும் ஒன்றிய அரசுடன் இணைந்து விருதுநகரில் பிஎம் மித்ரா ஜவுளிப் பூங்கா அமைகிறது. கப்பல் கட்டும் தொழிலுக்காக ஹூண்டாய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தோல் இல்லா காலணி தொழிற்சாலை அமைக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் ₹11,760 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க உள்ளோம். அதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் முதலீட்டாளர்களின் ஒவ்வொருவரின் பங்கும் அவசியம். மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி.மாவட்டம் தோறும் பரவலான வளர்ச்சி என நிரூபித்து காட்டியுள்ளோம்” என்றார்.
Read more: இந்த உடல் நலப்பிரச்சனைகள் இருந்தால் மட்டன் சாப்பிடக் கூடாது.. கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!



