ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சாலை விபத்தில் திருமணம் ஆகி 8 மாதங்களே ஆன பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரமக்குடி அருகே பிடாரிச்சேரி புத்தூரைச் சேர்ந்த மதன் (30). இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சங்கீதா (27) என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. இருவரும் பரமக்குடி ஓட்டப்பாலம் அருகே உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தனர். சமீபத்தில் உடல் எடை குறைப்பு பயிற்சி கூடங்களை நடத்தும் நபர்களுக்கான கிரிக்கெட் போட்டி மதுரையில் நடைபெற்றது.
அதில் மதன்-சங்கீதா தம்பதியினர் இணைந்து பங்கேற்று விளையாடினர். போட்டி முடிந்ததும் இருவரும் பைக்கில் மதுரையிலிருந்து பரமக்குடி நோக்கி பயணம் செய்தனர். நள்ளிரவு, கமுதக்குடி நான்கு வழிச்சாலையில் பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டனர்.
பைக் மட்டும் பாலத்தில் விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றினர். சங்கீதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மதன் கால் மற்றும் தலையில் கடுமையான காயங்களுடன் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டார்.. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாலை விபத்தில் திருமணம் ஆகி 8 மாதங்களே ஆன பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.