உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் ஜோடியான ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர். அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன்களான சீனாவின் லியு ஷெங் ஷு மற்றும் டான் நிங் ஜோடியை எதிர்த்து விளையாடிய இந்திய இணை, மூன்று செட்டுகள் வரை கடுமையாகப் போராடியது.
எந்தவித தரவரிசையும் இன்றி களமிறங்கிய இந்திய ஜோடி, முதல் சுற்றில் உலக முதலிடமான சீன ஜோடியை 21-18 என்ற கணக்கில் வீழ்த்தி மிரளச் செய்தது. எனினும், கடுமையான போராட்டத்திற்குப் பிறகு அடுத்தடுத்த சுற்றுகளில் 21-13, 21-8 என்ற கணக்கில் சீன ஜோடி வெற்றி பெற்றது. இப்போட்டி 1 மணி 11 நிமிடங்கள் நீடித்தது.
ஆரம்பத்தில் இந்திய ஜோடி அபாரமாகச் செயல்பட்டு, 15-18 என பின்தங்கிய நிலையிலும் தொடர்ந்து 6 புள்ளிகளைக் குவித்து முதல் கேமை கைப்பற்றியது. ஆனால், இரண்டாவது கேமிலிருந்து சீன ஜோடி தங்கள் ஆட்ட உத்தியை மாற்றி ராலிகளை நீட்டியதுடன், இந்திய வீராங்கனைகளின் ஆட்டத்தை தடுத்து வெற்றியைக் கைப்பற்றியது.
இந்தத் தோல்விக்குப் பிறகும், உலக சாம்பியன்ஷிப் தொடர்களில் இந்தியா தொடர்ந்து பதக்கம் வெல்லும் பாரம்பரியத்தை இந்த ஜோடி வெற்றிகரமாகத் தக்கவைத்துள்ளது. உலகத் தரவரிசையில் முன்னாள் டாப் 10 வீராங்கனைகளான இவர்கள், இந்தத் தொடரில் தங்களின் சிறப்பான ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
15 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் கிடைத்துள்ளது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு அஸ்வினி பொன்னப்பா, ஜூவாலா கட்டா இணை வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.



