தஞ்சை மாவட்டம் பெரியகோட்டை கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். நித்யா என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை ஓவியா ஆறாம் வகுப்பும், இரண்டாவது குழந்தை கீர்த்தி மூன்றாம் வகுப்பும், படித்து வந்தனர். மூன்றாவது மகன் ஈஸ்வரனுக்கு ஐந்து வயது ஆகிறது.
இந்த நிலையில் நித்யாவுக்கு மன்னார்குடியைச் சேர்ந்த ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. கணவனையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளாமல் நித்யா அந்த நபருடனேயே பேசி வந்திருக்கிறார். இந்த நிலையில் கணவன் குழந்தைகளை பிரிந்த நித்யா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதலனுடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் மனைவியை அடிக்கடி சந்தித்து தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார்.
ஆனால் வாழ்ந்தால் கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் என திட்டவட்டமாக கூறிய நித்யா கணவனுடன் செல்ல மறுத்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த வினோத் குமார், ஒரு கட்டத்தில் மனைவி மீதான கோபத்தை குழந்தைகள் மீது காட்டி இருக்கிறார். சம்பவத்தன்று குழந்தைகளுக்கு பிடித்த திண்பண்டங்களை வாங்கி வந்த வினோத்குமார், குழந்தைகள் அவற்றை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குழந்தைகளை அடுத்தடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதை அடுத்து மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் தனது மூன்று குழந்தைகளையும் கொலை செய்து விட்டதாக கூறி வினோத்குமார் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வினோத்குமாரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: நாளையுடன் முடிவுக்கு வரும் Windows 10 : லட்சக் கணக்கானோருக்கு ஆபத்து; நீங்கள் என்ன செய்ய வேண்டும்?