2 நாட்களுக்கு சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரனை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.. சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் நேற்றிரவு சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என அண்ணாமலை தினகரனிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டிடிவி தினகரனுடன் பேசியது என்ன என்பது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்தார்.. அப்போது பேசிய அவர் “ டிடிவி தினகரன் ஒரு மாதம் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு சென்னை வந்த உடன் என்னிடம் தொலைபேசியில் பேசினார்.. அதனடிப்படையில் அவரை சந்தித்து பேசினேன்.. அவரை சந்தித்தது உண்மை தான்.. தமிழகத்தில் தற்போது அரசியல் களம் எப்படி உள்ளது என்பது பற்றி பேசினோம்.. திமுக கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பேசினோம்.. இது ஒரு வெளிப்படையான சந்திப்பு தான்..
எப்போதும் டிடிவி தினகரனும் பாஜகவும் தொடர்ந்து நட்புறவில் தான் உள்ளது.. கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என தினகரனுக்கு அழைப்பு விடுத்தேன்.. நவம்பர் மாததிற்குள் நல்ல முடிவை அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார்.. திமுக கூட்டணியை தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டும் தான் வீழ்த்த முடியும்.. டிடிவி தினகரன் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்..” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் கூட்டணியில் இணைய வேண்டும் என்ற அண்ணாமலையில் கோரிக்கையை டிடிவி தினகரன் நிராகரித்தார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ அண்ணாமலையின் முயற்சியால் தான் பாஜக கூட்டணியில் நாங்கள் இணைந்தோம்.. அந்த கூட்டணியில் இருந்து நாங்கள் விலகிய போது, என்னிடம் தொலைபேசியில் பேசி கூட்டணியில் இணைய வேண்டும் என வலியுறுத்தி வந்தார்..
நாங்கள் நேரில் சந்தித்த போதும் மீண்டும் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.. எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை எனது முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது என்பது தான் உண்மை..” என்று தெரிவித்தார்.
Read More : பாஜகவிற்கு நீங்கள் தலைவரா? இல்ல அண்ணாமலை தலைவரா? நயினார் நாகேந்திரன் பதில்!