நாட்டில் மொத்தம் 1,78,184 ஆயுஷ்மான் சுகாதார மையங்கள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மையங்கள் மூலம் சுகாதார பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில், ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்களில் விரிவான சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நோய்த் தடுப்பு முறைகள், தொற்று மற்றும் தொற்றாத நோய்களுக்கான சிகிச்சைகள், குழந்தைகள் நலன் மற்றும் இதர சுகாதார சேவைகளும் இந்த மையங்களில் வழங்கப்படும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியமான மருந்துகள், பரிசோதனைகள், கூடுதல் மனிதவளம், மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழில்நுட்ப வசதிகள் என பல்வேறு நிலைகளில், ஆயுஷ்மான் சுகாதார மையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், கட்டணமில்லா சுகாதார பரிசோதனை முன்முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கட்டணமில்லா உடல் பரிசோதனை சேவைகளுக்கான முன்முயற்சியாக ஆரம்ப சுகாதார மையங்களில் 63 வகையான பரிசோதனைகள் மற்றும் துணை மையங்களில் 14 வகையான பரிசோதனைகள் உட்பட பல்வேறு பொது சுகாதார சேவைகள் கட்டணமின்றி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.