காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். ஓரணியில் தமிழ்நாடு அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய நிர்வாகிகளுக்கு, உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் 75% பேர் உயர்கல்வி படிப்பது தமிழகத்தில் தான். இதனால் நாடு முழுவதும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக பார்க்கப்படுகிறது.
விரைவில் 5 லட்சம் இளைஞர்களை திமுக இளைஞர் அணியில் இணைக்கும் திட்டம் உள்ளது. மக்களை காப்போம் என சுற்றுப்பயணம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அவர் முதலில் அதிமுகவையே காப்பாற்ற வேண்டும்.
அதிமுக பல கோஷ்டிகளால் பிளவுபட்டுள்ளது. தங்கள் பிரச்சினையை தீர்க்க டெல்லி ஓடுகின்றனர். பாஜகவின் அடிமையாக மாறிவிட்டனர். இரண்டு திமுக தொண்டர்கள் சந்தித்தால் கட்சிப் பணி குறித்து பேசுவார்கள். ஆனால், இரண்டு அதிமுக தொண்டர்கள் சந்தித்தால், ஒருவரின் கோஷ்டி எது என்று சந்தேகம் கொள்ளும் பரிதாப நிலையில் அதிமுக உள்ளது.
எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் உடைப்பு வரும் என்கிறார். ஆனால், உடைந்து போகிறார்கள் அதிமுக கூட்டணியில்தான். திமுக கூட்டணி மக்களுக்காக உருவான இயற்கையான கூட்டணி. அதிமுக கூட்டணி நட்சத்திர விடுதிகளில் பேசி முடிகிறது; திமுக கூட்டணி கட்சித் தலைமையகத்தில் நடக்கிறது என்றார்.
கடைசியாக “மக்களுக்கு நம் அரசின் சாதனைகளை எடுத்துச் செல்லுங்கள். 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, திமுக 7-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும். தலைவர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதல்வராக அமைய வேண்டும்” என்றார்.



