பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா மேம்பாலம் அருகே பெரியாரின் திருவுருவப்படத்திற்கு புகழேந்தி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், “தன்மானம், சுயமரியாதை பற்றி எப்போதும் பேசும் எடப்பாடி, டெல்லி சென்றபோது முகம் மறைத்து வெளியே வர வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? அமித்ஷாவிடம் சந்தித்து வந்த பிறகு ஏன் முக்காடு போட்டுக் கொண்டார்?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதிமுக அலுவலகம் உடைக்கப்பட்டது என்று தொடர்ந்து கூறி வருகிறார் எடப்பாடி. ஆனால் உண்மையில் அந்த அலுவலகத்தில் 15 நாட்கள் பெண்களை அழைத்து வந்து குடிப்போட்டி, குத்தாட்டம் நடந்தது. அதைக் கண்டித்த பின் தான் நாங்கள் உள்ளே சென்றோம். கதவை உடைத்து உள்ளே சென்று ஆவணங்களை எடுத்தது உண்மை தான்; பின்னர் அவற்றை திருப்பி கொடுத்துவிட்டோம் என்று அவர் விளக்கம் அளித்தார்.
எடப்பாடி தனது காலடியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கொள்கையை புதைத்து விட்டார். நிரந்தர பொதுச்செயலாளர் ஜெ. என்று சொல்லிவிட்டு, இன்று தன்னை பொதுச் செயலாளர் என்று சொல்கிறார். நேற்று தான் அவர் உண்மையை ஒத்துக் கொண்டார்” என்றும் குற்றம்சாட்டினார்.
அத்துடன், நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து, “விஜயின் தாக்கம் மிகப் பெரியது. அது எதிர்க்கட்சிக்கும் அச்சத்தை தந்துள்ளது. விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறப் போகிறது. எடப்பாடி தனது பதாகையில் பெரியார், அண்ணா படங்களை பயன்படுத்துவதில்லை. ஆனால் விஜய் திராவிட இயக்க தலைவர்களை கொண்டாடுகிறார். அவர் கொண்டாடினால் நாங்களும் அவரை கொண்டாடுவோம்” என்றார்.