பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் வீட்டில் சமைத்து சாப்பிடுவதை விட ஹோட்டல்களில் வாங்கி பலரும் சாப்பிட ஆரம்பித்து விட்டனர். இவ்வாறு சாப்பிடும் போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் கிடைக்காமல் பல்வேறு வகையான நோய் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக தற்போது உள்ள இளைய தலைமுறையினர் பீட்சா மற்றும் பர்கர் போன்ற துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்ணுகின்றனர்.
இந்த பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகள் அளவுக்கு அதிகமாக உண்ணும் போது உடலில் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது. மேலும் இதில் அதிகமாக பதப்படுத்தப்பட்ட பொருட்களும், மைதாவும் சேர்க்கப்படுவதால் புற்று நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
மேலும் இதில் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படும் சீஸ்சில் கொழுப்பு சத்து அதிகமாக உள்ளதால் இது உடலிலும் ரத்த நாளங்களிலும் கொழுப்பை சேர்க்கிறது. இவ்வாறு அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடலில் பல்வேறு பாகங்களுக்கும் சீராக இரத்தம் செல்லாமல் பல்வேறு நோய்களும் ஏற்படுகிறது. மேலும் இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இதய நோய் பாதிப்பு அதிகரிக்கிறது.
தற்போது பலரும் வீட்டிலேயே பீட்சா மற்றும் பர்கர் போன்ற உணவுகளை தயாரித்து வருகின்றனர். இவ்வாறு வீட்டில் தயாரிக்கப்பட்ட பதப்படுத்தப்படாத உணவுப் பொருட்களை வைத்து பீட்சா மற்றும் பர்கர் சமைத்து உண்ணும் போது உடலுக்கு எந்த வித ஆபத்துகளையும் ஏற்படுத்தாது. எனவே புற்றுநோய் மற்றும் இதய பாதிப்பு போன்ற உயிரை கொல்லும் நோய்களிலிருந்து பாதுகாக்க பீட்சா மற்றும் பர்கர் போன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.