பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் இந்த கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளவும் பின்வருமாறு அறிவுரைகள் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்டுள்ளது.
மிகை அல்லது அதிக வெப்ப சலனத்தை தவிர்ப்பதற்கான அறிவுரைகள்:
மிகை அல்லது அதிக வெப்ப சலனத்தை தவிர்ப்பதற்கு பள்ளி மாணவர்களின் மூலம் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொது மக்களிடத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை; எந்நேரமும் யார் வேண்டுமானாலும் வெப்ப நெருக்கடி மற்றும் வெப்ப சலனம் சார்ந்த சூழலுக்கு ஆட்படலாம். இருப்பினும், குறிப்பிட்ட சிலருக்கு அதிக பாதிப்புகள் ஏற்படலாம். பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், திறந்தவெளியில் பணி புரியும் நபர்கள், மனநல பாதிப்பிற்கு ஆளான நபர்கள், உடல் நலமற்றவர்கள் குறிப்பாக இதய நோய் மற்றும் மிகை ரத்த அழுத்தம் உடையவர்கள்.
குளிர்வான காலநிலையிலிருந்து வெப்பமான காலநிலை கொண்ட இடங்களுக்கு இடம்பெயர்பவர்கள். அத்தகைய நபர்கள் இந்த வெப்ப சலனத்தின் போது பயணம் செய்வார்களாயின் அவர்களது உடலானது காலநிலை இணக்கம் கொள்ள குறைந்தது ஒரு வார காலமாவது எடுத்துக் கொள்ளும். எனவே அவர்கள் அதிகளவு நீர் பருக வேண்டும். காலநிலை இணக்கத்தை ஒருவர் படிப்படியாக வெளியில் செல்வதாலும், வெப்ப சூழ்நிலையில் வேலை செய்வதாலும் ஏற்படுத்த இயலும்.
எவ்வாறு பாதுகாத்து கொள்வது..?
நேரடி சூரிய ஒளியின் தாக்கம் மற்றும் வெப்பச்சலனத்தை தடுக்க வீட்டின் சூரிய ஒளிபடும் பக்கங்களில் பகல் பொழுதில் ஜன்னல்களைத் திரைக் கொண்டு மூடி வைத்தல், இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீட்டின் உள்நுழைய ஜன்னல்களைத் திறந்து வைத்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். நேரடியாக நம் மீது சூரிய ஒளி படுவதை தவிர்க்கும் விதமாக தலையை மூடுதல், குடை தொப்பி, குல்லா, துண்டு போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
ஏதேனும் வெளி வேலையாக செல்வதாக இருப்பின் காலை மற்றும் மாலை நேரத்தில் அது அமையும் வகையில் பார்த்துக் கொள்ளுதல் நலம் பயக்கும். வெளியில் செல்லும் கட்டாயம் இருப்பின் அந்நாளின் குறைவான வெப்பமுடைய நேரங்களில் செல்லும்படியாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். வெப்பமான நேரத்தில் வெளியில் செல்லும் பொழுது காலணிகளை அவசியம் அணிந்து செல்லலாம்.