தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம். விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு. ஒருங்கிணைந்த கட்டிட வளர்ச்சி விதிகளில் திருத்தம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம் பெட்ரோல் – டீசல் விலை அதிகமாக இருக்கிறது. அதேபோல, சுற்றுச் சுழலுக்கி மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகம் ஊக்குவிக்கப்படுகின்றன. அரசு தரப்பிலிருந்தும் பொதுமக்களிடையே எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானிய உதவியும் வழங்கப்படுகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் இப்போது பட்ஜெட் விலையிலும் கிடைக்கின்றன. புதிய புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் பல்வேறு அம்சங்களுடன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் அவற்றின் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள ஒரு சிரமமே அவற்றுக்கான சார்ஜிங் வசதிதான். எனவே சார்ஜிங் வசதி அனைத்து இடங்களிலும் கிடைக்க அரசு தரப்பிலிருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இனி அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகங்கள் கட்டுபவர்களுக்கு புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அபார்ட்மெண்டுகளில் மின்சார வாகனத்திற்கான சார்ஜிங் வசதி அமைக்க வேண்டும் என தமிழக அரசு புதிதாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குடியிருப்புகள், வணிகத் தொழிற்சாலை மற்றும் கல்வி நிறுவன வளாகங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் ஏற்படுத்தும் வகையில் விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிதாக திருத்தம் செய்யப்பட்ட விதிகளின் படி 750 சதுர மீட்டருக்கு அதிகமான கட்டுமான பரப்பு அல்லது 8 வீடுகளுக்கும் அதிகம் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள்,50 க்கு மேற்பட்ட வீடுகள் உள்ள குடியிருப்புகளில் பார்வையாளர்களுக்கும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



